Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்பாக்கம் - பல்லாவரம் இணைப்பு சாலைக்கு விமோசனம்

Print PDF

தினமலர் 23.07.2010

செம்பாக்கம் - பல்லாவரம் இணைப்பு சாலைக்கு விமோசனம்

தாம்பரம் : செம்பாக்கம் - பல்லாவரம் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையில் 30 வருட போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையின் அனுமதி பெற்று துவக்கப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் இச்சாலை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது.தாம்பரம் - வேளச்சேரி சாலையில் இருந்து செம்பாக்கம் சுரேந்தர் நகர், அஸ்தினாபுரம் வழியாக செம்பாக்கம் - பல்லாவரத்தை இணைக்கும் முக்கிய பிரதான சாலை செல்கிறது. இச்சாலை வழியாக தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. தாரகேஸ்வரி நகர், சாம்ராஜ் நகர், வி.ஜி., பொன் நகர், திருமலை நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு மழையின் போதும், இச்சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கிவிடும். இதனால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுவதால், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். முக்கியமான இச்சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்தது.

ஆனால், இச்சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், சாலை அமைக்க வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற, பேரூராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. சில காரணங்களால், கடந்த 30 ஆண்டுகளாக வனத்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், அமைச்சர் அன்பரசன், தாம்பரம் எம்.எல்.., எஸ்.ஆர்.ராஜா மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் முயற்சியால், 30 வருடங்களுக்கு பிறகு சாலை அமைக்க சமீபத்தில் வனத்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தது.

இதையடுத்து, ஸ்ரீ பெரும்புதூர் எம்.பி., டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 30 லட்சம் ரூபாய், பேரூராட்சி பொது நிதி 30 லட்சம் ரூபாய் என 60 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. தடைபடாமல் துரிதமாக நடந்து வந்த இச்சாலைப் பணி தற்போது முடிந்துள்ளது. விரைவில் இச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முப்பது வருட போராட்டத்தின் விளைவாக வனத்துறை இடத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுப்புற பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.