Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.12 ஆயிரத்து 94 கோடிக்கு நெடுஞ்சாலை பணி : அமைச்சர் பெருமிதம்

Print PDF

தினமலர் 13.08.2010

ரூ.12 ஆயிரத்து 94 கோடிக்கு நெடுஞ்சாலை பணி : அமைச்சர் பெருமிதம்

திருப்பூர்: ""கடந்த நான்கரை ஆண்டுகளில், 4,891 பாலங்கள், 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் ரோடு என தமிழகத்தில் 12 ஆயிரத்து 94 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடந்துள்ளன,'' என அமைச்சர் சாமிநாதன் பேசினார்.மங்கலம் நொய்யல் ஆற்றில் 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட, நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் 2006 முதல் இன்று வரை 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு, பாலம் என 12 ஆயிரத்து 94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன.பாலம் அமைப்பதில் 1,082 சிறு பாலங்கள், 3,809 மேம்பாலங்கள் என இதுவரை 881 கோடி ரூபாய் அளவுக்கு பாலம் கட்டும் பணிகள் நடந்துள்ளன. அதேபோல், ரோடு விரிவாக்கம், பராமரிப்பு, புதிய ரோடு என 11 ஆயிரத்து 213 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் முழுமையாக நடந்துள்ளன.நடப்பு நிதியாண்டில், நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்காக 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பணிகள் மேலும் வேகமாக நடக்கும். கடந்த 2001-05ம் ஆண்டுகளில் 6,066 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 46 ஆயிரத்து 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. மொத்தமாக 871 பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டன.தற்போதைய அரசு, கட்டமைப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்துவதால், கடந்த ஆட்சி காலங்களை காட்டிலும் பல மடங்கு அதிகமாக பணிகளை நடத்தி வருகிறது. ரயில்வே பால பணிகளை செய்ய வேண்டுமெனில், தமிழக அரசு 50 சதவீத செலவை ஏற்க வேண்டும்.

கூடுதல் செலவு இருந்தாலும், கடந்த 4.5 ஆண்டுகளில், 93 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்த ஆட்சி காலத்தில், 2,246 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 104 ரயில்வே பாலங்களை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆட்சியில் ஒன்பது பாலங்கள் மட்டுமே கட்டப்பட்டன. அதிலும் சில பாலங்கள் முந்தைய தி.மு.., ஆட்சியில் வரையறுக்கப்பட்டது.திருப்பூர் நகரம், நொய்யல் மற்றும் ரயில் ரோட்டால் பிரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. நெரிசலை குறைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் திருப்பூரில் கூடுதல் பாலங்கள் அமைக்கப்படுகின்றன.கோவைக்கு அடுத்தபடியாக, திருப்பூரில் ரயில்வே மேம்பாலம் இருந்தது. அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் இருந்தது.

இந்நிலையை மாற்றி, தேவையான பகுதிகளில் பாலம் அமைக்கும் பணி ஜோராக நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 273 ஊராட்சிகளிலும், விடுபட்டவர்களுக்காக 48 ஆயிரம் "டிவி'க்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை, ஊராட்சிகளில் 73.90 கோடி ரூபாய்; பேரூராட்சிகளில் 16.51 கோடி ரூபாய்; நகராட்சிகளில் 18.25 கோடி ரூபாய் என 108.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான "டிவி'க்கள், திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய நலத்திட்ட பணிகள் மேலும் தொடரும். இவ்வாறு, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.