Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூட்ட நெரிசலை சமாளிக்க அயனாவரம் சாலை 4 வழிப்பாதையாகிறது: இந்த மாத இறுதிக்குள் திறப்பு

Print PDF

மாலை மலர் 16.08.2010

கூட்ட நெரிசலை சமாளிக்க அயனாவரம் சாலை 4 வழிப்பாதையாகிறது: இந்த மாத இறுதிக்குள் திறப்பு

சென்னை, ஆக. 16- அயனாவரம் சாலை எப்போதும் வாகன நெரிசலில் சிக்கி திணறுகிறது. இந்த நெரிசலை சமாளிக்க அயனாவரம் உட்புற சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி முடிவு செய்தது. அயனாவரம், மேடவாக்கம் டேங்க் ரோட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டை இணைக்கும் இந்த சாலை 3 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.

15 முதல் 20 அடி அகலம் கொண்ட இந்த சாலை 50 அடியாக விரிவுபடுத்தப்பட்டு 4 வழி சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

இந்த சாலை விரிவாக்கத்துக்காக மனநல ஆஸ்பத்திரி மற்றும் குடிநீர் வாரியத்தின் 50 கிரவுண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக குடிநீர் வாரியத்துக்கு 55.24 லட்சமும், பொதுப் பணித்துறைக்கு 72.39 லட்சமும் மாநகராட்சி வழங்கி உள்ளது.

இதுபற்றி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

அயனாவரம் சாலை மற்றும் ராஜராஜன் சாலை சுமார் ரூ.3 கோடி செலவில் 4 வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இடிபாடுகள் அகற்றப்பட்டு மண் நிரப்பி சமப்படுத்தி சாலை போடப்படுகிறது.

மழைநீர் ஓடை கட்ட 1.73 கோடியும், சாலை விரிவாக்கத்துக்கு 1.20 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து திறக்கப்படும். இந்த சாலை விரிவாக்கத்தால் அயனாவரம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.