Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சை நகர சாலை மேம்பாட்டுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு பழைய பஸ் நிலையத்தில் ரூ.80 லட்சத்தில் கான்கிரீட் தளம்

Print PDF

தினகரன் 17.08.2010

தஞ்சை நகர சாலை மேம்பாட்டுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு பழைய பஸ் நிலையத்தில் ரூ.80 லட்சத்தில் கான்கிரீட் தளம்

தஞ்சை, ஆக. 17: தஞ்சை நகர சாலை மேம்பாட்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பஸ் நிலையத்தில் ரூ.80 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது.

தஞ்சை நகர்மன்ற அவசரக்கூட்டம் நகர்மன்றத் தலைவர் தேன்மொழி ஜெயபால் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி தஞ்சை நகர வளர்ச்சிக்கு ரூ.25.19 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி பகுதியில் சாலைகள் மேம்பாட்டு பணிக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.60 லட்சத்தில் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல், ரூ.80 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல், திருவையாறு பஸ் நிறுத்தம் பகுதியில் ரூ.50 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைத்தல், புதிய பஸ் நிலையத்தில் ரூ.30 லட்சத்தில் நவீன சுகாதார வளாகம் அமைத்தல், பெரியகோயில் முதல் மருத்துவக்கல்லூரி சாலையில் நகராட்சி எல்லை வரை மையத்தடுப்பில் ரூ.70 லட்சத்தில் தெரு விளக்குகள் அமைத்தல், பெரியகோயில், கொடிமரத்து மூலை, ஆற்றுப்பாலம் அருகில் ரூ.44 லட்சத்தில் நவீன சுகாதார வளாகம் கட்டுதல், ரூ.25 லட்சத்தில் சோழன் சிலை உள்ள பூங்காவை அழகுபடுத்துதல், ரூ.10 லட்சத்தில் நகராட்சி எல்லையில் 30 இடங்களில் பெயர்ப்பலகைகள் மற்றும் தகவல் பலகைகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 20 கோடியில், தஞ்சை பெரியகோயிலுக்கு வரும் பிரதான பாதைகள் மற்றும் அணுகு சாலைகளான கலைக்கல்லூரி சாலை, அருளானந்தநகர் பிரதான சாலை, எல்ஐசி காலனி பிரதான சாலை, சுந்தரம் நகர் 2ம்தெரு, வஉசி நகர் தெரு, பர்மாபஜார் தெரு, சின்னையா பாலம் தெரு, ராஜாஜி சாலை, ராஜன் சாலை, பழைய ராமேஸ்வரம் சாலைகள் ரூ.3.66 கோடியில் சீரமைக்கப்படுகின்றன.

தஞ்சை நகராட்சிப்பகுதியில் பாதாள சாக்கடை திட்ட செயலாக்கத்தால் பழுதடைந்த பழைய திருவையாறு சாலை, லட்சுமிராஜபுரம் அக்ரஹாரம் சாலை, எஸ்ஏ ஆனந்தன் நகர் பிரதான சாலை, சுங்காந்திடல் வடக்குத் தெரு, சுந்தரம்பிள்ள நகர் சாலை, வளையல்காரத்தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, பரசுராம அக்ரஹாரம், ஏவி பதி நகர் சாலை, பூமால் ராவுத்தர் கோயில் தெரு, சுண்ணாம்புக்கார கால்வாய் தெரு, குயவர் தெரு, வண்டிப்பேட்டை தெரு, மேலக்காரத்தெரு, வி.பி.கோயில் நான்கு வீதிகள் (நாலுகால் மண்டபம்), ரெட்டிப்பாளையம் தெரு, ஆனந்தம் நகர் முதல் தெரு மற்றும் 2ம் தெருக்கள் உள்பட மொத்தம் 103 தெருக்களிலுள்ள சாலைகள் ரூ.13.05 கோடியில் சீரமைக்கப்படுகின்றன.

இதுதவிர, நீதிமன்ற சாலை, கிரி சாலை, மேற்கு பிரதான சாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை, கீழவீதி பஜார் சாலை, எம்கேஎம் சாலை, வாடிவால் கடைத்தெரு, நடராஜபுரம் காலனி தெற்குத்தெரு, விளார் சாலை மற்றும் யாகப்பா நகர் பிரதான சாலைகளில் ரூ.10.95 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டச்செலவுகள் போக திட்டத்திற்கான மண் பரிசோதனை திட்ட விரிவான வடிவமைப்புகள் மற்றும் இதர இனங்களுக்கான செலவுகளை மேற்கொள்ள நகராட்சி ஆணையருக்கு முழு அதிகாரம் அளித்து மன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள தனது வார்டில் ஒரு தெரு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை எனக்கூறி மதிமுக கவுன்சிலர் சங்கர் வெளிடப்பு செய்தார்.