Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.24.66 கோடிக்கு ரோடு; தீர்மானம் நிறைவேறியது!

Print PDF

தினமலர் 25.08.2010

ரூ.24.66 கோடிக்கு ரோடு; தீர்மானம் நிறைவேறியது!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் 24.66 கோடி ரூபாயில் ரோடு போடுவதற்காக, நேற்றைய அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், மேயர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது; கமிஷனர் ஜெயலட்சுமி, துணை மேயர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 24.66 கோடி ரூபாய் மதிப்பில் 90 கி.மீ., தூரத்துக்கு 109 பகுதிகளில் புதிதாக ரோடு போட அனுமதி அளிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுக்கு முன் போடப்பட்டு, தற்போது பழுதடைந்துள்ள ரோடு மற்றும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மண் ரோடுகளை தார் ரோடுகளாக அமைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட விவாதம் வருமாறு: ராதாகிருஷ்ணன் (.தி.மு..,): மாநகராட்சி பகுதிகளில், மண் ரோடுகளை மாற்றி புதிய ரோடு அமைத்தல்; பழுதடைந்த ரோடுகளை புதிதாக அமைத்தல் பணிகளுக்காக மதிப்பீடு செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அனைத்து வார்டுகளிலும் இத்திட்டத்தில் ரோடுகளை சேர்க்கவில்லை. அனைத்து ரோடுகளையும் சேர்க்க முடியாமல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இன்னும் 25 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கி, விடுபட்ட மற்ற பகுதிகளையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இத்திட்ட நிதியை 100 சதவீத மானியமாக வழங்க, இத்தீர்மானத்தில் அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

மேயர்: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பணி செய்ய ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. ஐந்தாண்டுக்கு முன் போடப்பட்டு பழுதடைந்துள்ள ரோடு; பிரதானமாக உள்ள மண் ரோடுகளை, இத்திட்டத்தில் தார் ரோடுகளாக அமைத்துக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, கருத்துகள் கேட்டு திட்ட மதிப்பீடு தயாரானது. 90 கி.மீ., தூரத்துக்கு 24.66 கோடி ரூபாய் பணி செய்ய அரசு அனுமதிக்கிறது; இந்நிதி முழுவதும் அரசு மானியமாகவே வழங்குகிறது. இதற்காக, அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதில் விடுபட்ட பகுதிகளிலும் "டுரிப்' திட்டத்தின் கீழ் ரோடு, சாக்கடை பணிகள் நடக்கும். தங்கவேல் (மா. கம்யூ.,): தீர்மானத்தில் பணிகள் நடக்கும் வார்டுகள் எவை என குறிப்பிடவில்லை; எந்த ரோடும் ஐந்தாண்டு வரை நீடிக்காதபோது, எந்த அடிப்படையில் ஐந்தாண்டுக்கு முந்தைய ரோடுகளை வரையறுப்பது என தெரியவில்லை. ரோடு போடும் பணி துவங்கிய நாளா, முடிவடைந்த நாளா என தெளிவுபடுத்தவில்லை. இதனால், மோசடி நடக்கும்; குழப்பங்களும் ஏற்படும். இதற்கு மேயர் பதிலளிக்கையில், "வார்டு வாரியாக நிதியை பிரிக்கக்கூடாது என்பதால், பணி நடக்கும் பகுதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டது,' எனக்கூறி, 109 பகுதிகளுக்கான வார்டு எண்களை பொறுமையாக படித்து காட்டினார். ஈஸ்வரமூர்த்தி (மா. கம்யூ.,): இத்திட்டத்தில் எனது வார்டில் உள்ள பழுதடைந்த ரோடுகள் சேர்க்கப்பட வில்லை; கரையோர பகுதிகளான கே.வி.ஆர்., நகர், ஜீவா நகரில் மழை பெய்தால் வீடுகளுக்குள் கழிவுநீர் சென்று மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களை பாதுகாக்கும் பொறுப்பு மாநகராட்சிக்கு உள்ளது. எனது வார்டில் பணிகள் சரிவர நடப்பதில்லை. நடராஜன் (இந்திய கம்யூ.,): தார் ரோடு அமைக்க 25 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது; மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை, அரசு செய்திருப்பதை வரவேற்கிறோம். அதற்காக, அரசுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்து தீர்மானம் தேவையா என்ற கேள்வி எழுகிறது. மேயர் குறுக்கிட்டு,"கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், சிறப்பு சாலை திட்டத்துக்காக ஒதுக்கப்படும் 25 கோடி ரூபாய் நிதியை மானியமாக அரசு வழங்க கோரிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்; அதற்கு, அந்நிதியை அரசு மானியமாக வழங்குவதை சுட்டிக்காட்டி, நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றலாம் என்று தெரிவித்தேன்,' என்றார். நடராஜன்: "டுரிப்' திட்டத்தில் 120 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் போடப்படும் ரோடு போல், சிறப்பு சாலை திட்டத்தில் போடப்படும் ரோடு, உலகத் தரம் வாய்ந்தவையாக இருக்குமா, சாதாரண முறையில் ரோடு போடப்படுமா என மாநகராட்சி தெளிவுபடுத்த வேண்டும். அதன்பின் பேசிய செழியன் (காங்.,), பழனிசாமி (தி.மு..,), கலிலுர் ரகுமான் (முஸ்லிம் லீக்) ஆகியோர், இத்திட்டத்துக்கு நன்றி தெரிவித்தனர். சாவித்திரி (மா. கம்யூ.,): வார்டில் பணிகள் சரிவர நடப்பது இல்லை. பழுதடைந்த ரோட்டை புதுப்பித்து தர, இத்திட்டத்தில் பாலம் பகுதி வழியாக செல்லும் ரோட்டை சேர்க்க வேண்டும்.இப்பிரச்னை குறித்து சாவித்திரி தொடர்ந்து கேள்வி எழுப்பியதை அடுத்து, குறிப்பிட்ட பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். தொடர்ந்து சாந்தாமணி, சிவபாலன் (.தி.மு..,) ஆகியோர், வார்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பேசினர். துணை மேயர் செந்தில்குமார் (காங்.,): சிறப்பு சாலைகள் திட்டத்தில் சில பகுதிகளை சேர்க்க முடியாமல் நிதி பற்றாக்குறையாக உள்ளது என்பது உண்மை. அதேநேரத்தில், அங்கீகரிக்கப்படாத பகுதிகளை வரன்முறைப்படுத்தி இத்திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம், அப்பகுதிகளில் போதிய வசதிகள் ஏற்படும்; இத்திட்டத்தை வரவேற்கிறோம். அடுத்து வர உள்ள மத்திய அரசின் திட்டங்களால், வளர்ச்சி பணி முழுமை யடையாத மற்ற வார்டுகளிலும், இப்பணி நடக்க வாய்ப்பு ஏற்படும், என்றார்.மொபைல் போனை தவிர்க்கலாமே! கூட்டம் துவங்கியதில் இருந்து பல கவுன்சிலர்களின் மொபைல் போன்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. இதனால், மைக்கில் பேசிய கவுன்சிலர்கள், பதிலளித்த மேயரின் கவனம் தடைபட்டு கொண்டே இருந்தது. சில கவுன்சிலர்கள், கூட்டம் நடந்த அரங்கில் அமர்ந்தபடியே போனில் பேசினர். சிலர், ஒலித்த போன்களை கண்டுகொள்ளாமல், கூட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். மக்கள் பிரச்னைகளை பேசும் இடத்தில், மொபைல் போனை "சைலண்டில்' வைக்கலாம் அல்லது, அவர்களது உதவியாளர், உறவினர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருப்பதால், சில மணி நேரத்துக்கு மொபைல் போனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தலாம். இனியாவது கவுன்சிலர்கள், இதை பின்பற்றுவார்களா?