Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிப் பகுதியில் ரூ 60 கோடியில் தார்ச்சாலை இரு மாதங்களில் பணிகள் தொடக்கம்: ஆணையர்

Print PDF

தினமணி 28.04.2010

மாநகராட்சிப் பகுதியில் ரூ 60 கோடியில் தார்ச்சாலை இரு மாதங்களில் பணிகள் தொடக்கம்: ஆணையர்

மதுரை, ஆக. 24: மதுரை மாநகராட்சிப் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் 140 கிலோ மீட்டருக்கான தார்ச்சாலைப் பணிகள் இன்னும் 2 மாதங்களில் துவங்க வாய்ப்புள்ளது என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மதுரை மாநகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம், கேபிள் வயர் பதிப்பு, குடிநீர்க் குழாய் பதிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக, பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு சாலைகள் பழுதாகியுள்ளன.

இவற்றை சீரமைக்கும் விதமாக சிறப்புச்சாலை திட்டத்தின்கீழ், தமிழக அரசு மதுரை மாநகராட்சிக்கு ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளிலும் பழுதான சாலைகள் குறித்து கணக்கெடுத்து 140 கிலோ மீட்டர் வரை சாலைகள் அமைக்கும் பணி இன்னும் இரு மாதங்களில் துவங்கும்.

குழிகள் தோண்ட 5 ஆண்டுகளுக்கு தடை: இந்த தார்ச்சாலைப் பணிகள் முடிந்தவுடன் குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, கேபிள் பதிப்பது உள்ளிட்ட எந்தப் பணிகளுக்கும் குழிதோண்டுவதற்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநகராட்சி பகுதிக்குள் தடை விதிக்கப்படும். எனவே, இதுபோன்றவற்றுக்கு தார்ச்சாலை அமைக்கும் முன்பே இணைப்புப் பெற்றுக்கொள்ள மக்கள் முன்வரவேண்டும்.

உயரக் கட்டடங்கள் கணக்கெடுப்பு: உயரக் கட்டுப்பாட்டு விதிமுறை மீறி சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடிக்கப்படும்.

நீதிமன்ற வழக்குகளால் மதுரை மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட்டுள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் செயல்படுவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பூங்காக்கள், ஏரிகளை மேம்படுத்த மாநகராட்சி சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, நிதி கோரி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான நிதியும் மதுரை மாநகராட்சிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பின் பூங்காக்கள், ஏரிகள் மேம்படுத்தப்படும்.

வரி வசூல் தீவிரப்படுத்தப்படும்: மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டப் பணிகளால் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களில் நிலுவையில் உள்ள வரிகளை வசூல் செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனால், வரிகளை வசூல் செய்வதில் தீவிரக் கவனம் செலுத்தி, மாநகராட்சிக்கான வருவாயைப் பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார் கமிஷனர் எஸ்.செபாஸ்டின்.