Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் ரோட்டை சீரமைக்க அரசிடம் ரூ.32 கோடி சிறப்பு நிதி : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 31.08.2010

தூத்துக்குடியில் ரோட்டை சீரமைக்க அரசிடம் ரூ.32 கோடி சிறப்பு நிதி : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகர பகுதியில் 32 கோடி ரூபாய் செலவில் ரோடு போட அரசிடம் சிறப்பு நிதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சி உறுப்பினரின் திடீர் ஆவேசத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணிப்பு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் குபேந்திரன், துணைமேயர் தொம்மைஜேசுவடியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி, இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், வருவாய் அதிகாரி (பொ) ஜெயக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அவசர கூட்ட பொருளை துரைமணி வாசித்தார். கூட்டம் துவங்கியதும் காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் எழுந்து புதிய மாநகராட்சி கட்டடத்தில் கவுன்சிலர்கள் இருப்பதற்கு எந்த அறையும் இல்லை. ஒரு அறையை ஒதுக்க வேண்டும் என்றார். அவருக்கு ஆதரவாக கம்யுனிஸ்ட் கவுன்சிலர் ராஜா எத்தனையோ அறை பூட்டி கிடக்கிறது. அதில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு மேயர் பதில் அளிக்கையில், எனது அறையில் கவுன்சிலர்கள் வந்து இருக்கலாம். அவர்கள் எழுத வேண்டிய தகவலை எழுதிக் கொள்ளலாம். மேயர் கிளார்க் எப்போதும் எனது அறையில் இருப்பார். இதனால் கவுன்சிலர்கள் அறை ஒதுக்கீடு செய்யும் வரை இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

மாநகராட்சிக்கு சில பிரிவுக்கு இடம் போதவில்லை. அப்படி இருக்கும் போது கம்யுனிஸ்ட் ராஜா அறைகள் பூட்டியிருப்பதாக எதனையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார் என்றார். அதோடு அந்த பிரச்னை முடிந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பழுதடைந்த ரோடுகளில் 100 ரோடுகளை மொத்தம் 32 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் 89.73 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்க தமிழக அரசு முழு மானியமாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார் எனது வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுமார் 8 லட்ச ரூபாய் செலவில் எனது வார்டில் சாலை மேம்பாட்டு பணிகள் செய்ய டெண்டர் விடப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆவேசமாக பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே டெண்டர் விட்ட வேலை உடனடியாக செய்யப்படும். தற்போது மேற்கொள்ள அரசிடம் அனுமதிக்கு அனுப்பியுள்ள சாலையில் உங்கள் வார்டு சாலையும் சேர்கிறது என்று மேயர் கூறினார். ஆனால் எனது வார்டு அதில் சேரவில்லை என்று சுரேஷ்குமார் கூறினார். அதற்குள் அடுத்த தீர்மானம் நிறைவேறியது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு 20 லட்ச ரூபாய் செலவில் ஜெனரேட்டர் வாங்குவதற்குரிய ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதியளிக்கப்பட்டது. மாநகராட்சி தெருவிளக்கு பராமரிப்பு பணிக்கு ஸ்கை லிப்ட் ஏணி வாங்குவதற்குரிய ஒப்பந்தபுள்ளிக்கும் நேற்றைய கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

திமுகவினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள மாநகராட்சிக்குரிய இடங்களை திரும்ப பெறும் வரை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்று அதிமுக கவுன்சிலர்கள் கடந்த கூட்டத்தில் தெரிவித்தனர். இதனால் நேற்றைய கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் வராமல் புறக்கணிப்பு செய்தனர். மூன்று சாதாரண கூட்டத்திற்கு அவர்கள் வரவில்லை என்றால் அவர்களை பதவி நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.