Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திட்டச்சாலைகள் அமைக்க ரூ 700 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 04.09.2010

திட்டச்சாலைகள் அமைக்க ரூ 700 கோடி ஒதுக்கீடு

கோவை, செப்.3: தமிழகம் முழுவதும் திட்டச்சாலைகள் அமைக்க மாநில அரசு ரூ 700 கோடி ஒதுக்கியுள்ளது என்று உள்ளூர் திட்டக்குழும இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

கோவை உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் அவர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார் (படம்). பெரும்பாலான மனுதாரர்கள், அதிகாரிகள் தங்களுக்கு உரிய அனுமதிகளை வழங்க இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கொடுத்த புகார் மனுவில், பேரூர் செட்டிப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க 6 மாதங்களாக அதிகாரிகள் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதைப் பார்த்ததும், ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய பங்கஜ்குமார் குமார் பன்சல், விண்ணப்பதாரர்களுக்கு உரிய அனுமதியை வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளை அழைத்து கண்டித்தார். இந்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கொடிசியா தலைவர் எம்.கந்தசாமி, செயலர் சுருளிவேல் ஆகியோர் பங்கஜ்குமார் பன்சலிடம் மனு கொடுத்தனர். அதில் கோவை புறநகர் பகுதிகளான அரசூர், துடியலூர், சின்னவேடம்பட்டி, குறிச்சி, விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 266 தொழில்நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன.

இந்நிறுவனங்கள் அருகே சில ஆண்டுகளாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தொழில்நிறுவனங்கள் மீது தேவையற்ற புகார்களை தெரிவிக்கின்றனர். எனவே, மேற்கண்ட பகுதிகளை தொழில்நிறுவனப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பங்கஜ்குமார் பன்சால் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கோவை உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் இருந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலிப்பணியிடங்கள் இருந்தபோது 619 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இப்போது 350 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. ஒரு மாதத்துக்கு 75 முதல் 100 வரை விண்ணப்பங்கள் வருகின்றன.

தமிழகம் முழுவதும் திட்டச்சாலைகள் அமைக்கவும், அவற்றை விரிவுப்படுத்தவும் மாநில அரசு ரூ700 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்குத் தேவையான தனியார் நிலங்களை கையகப்படுத்தி அதற்குரிய தொகையை வழங்கவும் அரசு தயாராக உள்ளது என்றார். ஆய்வின்போது உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் நாகராஜன் உடன் இருந்தார்.