Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு ஒதுக்கியுள்ள ரூ. 10 கோடியில் விழுப்புரம் சாலைகள் சீரமைப்பு: சேர்மன் தகவல்

Print PDF

தினமலர் 14.09.2010

அரசு ஒதுக்கியுள்ள ரூ. 10 கோடியில் விழுப்புரம் சாலைகள் சீரமைப்பு: சேர்மன் தகவல்

விழுப்புரம் : விழுப்புரம் நகருக்கு அரசு ஒதுக்கியுள்ள 10 கோடி ரூபாய் நிதியில் சாலைகள் சீரமைக்கப்படுமென நகர சேர்மன் ஜனகராஜ் கூறினார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தொடர் மழையினால் சாலைகள் சேதமடைந்து மோசமாகியுள்ளது. சாலையில் குவிந்த மண் மேடுகளை அகற்றி வருகிறோம். தமிழகத்தில் நகர்புற சாலைகளை சீரமைக்க 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக திருச்சியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் அறிவித்துள்ளார்.

இதில் விழுப்புரம் நகருக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் இந்த நிதி கிடைக்கும் என எதிர்பார்த் துள்ளோம். கிடைத்தவுடன் 40 கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகள் போடப்படும். எஞ்சியுள்ள 25 கிலோ மீட்டர் சாலைப் பணிகள் நகராட்சி பொது நிதியில் நிதி ஒதுக்கி முடிக்கப்படும்.

இந்தப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு அக்., மாத கடைசியில் பணிகள் துவங்கும். பழைய பஸ் நிலையத்தில் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி சிமென்ட் தளம் போட்டு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வரும் ஜனவரிக்குள் முடிவடையும். குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ரயில் நிலையத்தை கடந்து செல்லும் சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்த ரயில்வே நிர்வாகம் தடையாக உள்ளது. நகராட்சி பள்ளி மைதானத்தில் 6 லட்சம் ரூபாயில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுகிறது. சென்னை சாலையில் (மேல் தெரு பகுதி) தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு 98 லட்சம் ரூபாய் நகராட்சி வழங்கியுள்ளது. இவ்வாறு சேர்மன் ஜனகராஜ் கூறினார்.