Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை சீரமைப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு உள்ளாட்சிகளில் சிறு கான்ட்ராக்டர்கள் விரக்தி

Print PDF

தினமலர் 29.09.2010

சாலை சீரமைப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு உள்ளாட்சிகளில் சிறு கான்ட்ராக்டர்கள் விரக்தி

மேட்டூர்: உள்ளாட்சிகளில் சாலை சீரமைப்பிற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதியில் சாலை சீரமைப்புகளுக்கான ஒப்பந்தங்களை பெரிய ஒப்பந்தாரர்கள் மட்டுமே பெற முடியும் என்பதால், சிறு ஒப்பந்ததாரர்கள் விரக்தியடைந்துள்ளனர்.மாநகராட்சி, நகராட்சி, டவுன்பஞ்., உள்பட மாநிலம் முழுவதும் உள்ளாட்சிகளில் பயன்பாட்டில் உள்ள தார்சாலைகள், கான்கிரீட் சாலைகளை சீரமைப்பதற்காக அரசு, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், சீரமைப்பிற்காக தேர்வு செய்யும் சாலைகள் மக்கள் அதிகம் நடமாடும் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, வழிபாட்டு தளங்கள் உள்ள பகுதியாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கேற்ப மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளை தேர்வு செய்து சீரமைக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களுக்கு ஒரு கோடி முதல் ஐந்து கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சீரமைப்பு பணிக்காக விரைவில் கான்ட்ராக்ட் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்ட்ராக்டர்களை பொறுத்தவரை ஐந்து கிரேடுகளில் உள்ளனர். கிளாஸ்-1 கிரேடு கான்ட்ராக்டர்கள் 75 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளை செய்ய முடியும்.

கிளாஸ்-2 கிரேடு கான்ட்ராக்டர்கள் 75 லட்ச ரூபாய்க்கும், கிளாஸ்-3 கான்ட்ராக்டர்கள் 30 லட்ச ரூபாய்க்கும், கிளாஸ்-4 கான்ட்ராக்டர்கள் 15 லட்ச ரூபாய்க்கும், கிளாஸ்-5 கான்ராக்டர்கள் 6 லட்சம் ரூபாய்க்கும் கீழ் உள்ள பணிகளை மட்டுமே செய்ய முடியும். தற்போது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், சீரமைக்க வேண்டிய சாலைகள் அதிகமாக இருந்தாலும், 75 லட்சத்திற்கு கூடுதலாக பணிகளாக மாற்றி டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால், கிளாஸ்-1 கிரேடு கான்ட்ராக்டர்கள் மட்டுமே சாலை சீரமைப்புக்கான ஒப்பந்தத்தை பெற முடியும். சில இடங்களில் கிளாஸ்-2 கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம் பெற வாய்ப்புள்ளது. நகராட்சி, டவுன்பஞ். பொறுத்தவரை கிளாஸ்-1 கான்ட்ராக்டர்கள் மிகவும் குறைவு.கிளாஸ்-4 மற்றும் 5 கான்ட்ராக்டர்களே அதிகம் இருப்பார்கள்.நெடுஞ்சாலைதுறை, ரெயில்வே, மின்வாரியம், பொதுப்பணித்துறை உள்பட குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே கிளாஸ்-1,2 கான்ட்ராக்டர்கள் அதிக ஒப்பந்த பணிகளை செய்கின்றனர். தற்போது உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணி ஒப்பந்தத்தை கிளாஸ்-1,2, கான்ட்ராக்டர்களே பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது சிறு கான்டாக்டர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.