Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்டத்தால் சேதம் சாலை சீரமைப்புக்கு ரூ2 கோடி நிதி ஆவடி நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 30.09.2010

பாதாள சாக்கடை திட்டத்தால் சேதம் சாலை சீரமைப்புக்கு ரூ2 கோடி நிதி ஆவடி நகராட்சி தலைவர் தகவல்

ஆவடி, செப். 30: ஆவடியில் பாதாள சாக்கடை திட்டத்தால் பாழடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளுக்கு ரூ2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவர் விக்டரி மோகன் தெரிவித்தார்.

ஆவடி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் விக்டரி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் எஸ்.அப்துல் ரகீம் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் நடத்திய விவாதம்:

சவுந்தரராஜன் (பகுஜன் சமாஜ்):

திருமுல்லைவாயல் தென்றல் நகர் பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். சரஸ்வதி நகர் முதல் திருமுல்லைவாயல் காலனி வரை சோடியம் விளக்குகள் அமைக்க வேண்டும்.

ராஜேந்திரன் (திமுக):

நகராட்சி பகுதிகளில் குப்பை அகற்றும் தனியார் நிறுவனம் குப்பை தொட்டிகளையும், ஊழியர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும்.

துரைராஜ் (திமுக):

நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொது கழிப்பிடம் கட்ட வேண்டும். சேக்காடு பகுதியில் சாலையோரம் இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி பஸ் வசதி செய்து தர வேண்டும்.

பழனி (பாமக):

மக்கள் பிரச்னைக்காக போராடிய கவுன்சிலர் பசுபதியை போலீசார் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் பசுபதி, வசந்தராஜ், தீனதயாளன், அமீத்பாபு, ரேவதி கலா, ஜான், சேகர், செல்வராஜ், முல்லைராமன், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி தலைவர் விக்டரி மோகன் பேசியதாவது:

நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ60 லட்சமும், சேக்காடு பகுதியில் தார்சாலையை சீரமைக்க ரூ25 லட்சமும், புதிய குப்பை தொட்டி வாங்க ரூ9.5 லட்சமும் ஒதுக்கப்படுகிறது.

அண்ணனூரில் நகராட்சி பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட ரூ25 லட்சமும், மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் கட்ட ரூ37 லட்சமும், ஆவடி பேருந்து நிலையத்தில் புதிய கழிவறை கட்ட ரூ5 லட்சமும், பருத்திப்பட்டு சுகாதார மையத்தை சீரமைக்க ரூ5 லட்சமும், திருமுல்லைவாயலில் புதிய சுய உதவிக்குழு கூடம் அமைக்க ரூ5 லட்சமும், 36வது வார்டில் உள்ள சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ13 லட்சமும் உட்பட ரூ2 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.