Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ 2.57 கோடியில் சாலைப் பணிகள்

Print PDF

தினமணி 12.10.2010

ரூ 2.57 கோடியில் சாலைப் பணிகள்

குளித்தலை, அக். 11: குளித்தலையில் ரூ 2.57 கோடியில் சாலைப் பணிகள் மேற்கொள்வது என்று திங்கள்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளித்தலை நகர்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் அ. அமுதவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வே. பல்லவிராஜா, மேலாளர் எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நகராட்சிப் பகுதியில் ரூ 2.57 கோடியில் சிமென்ட், தார் சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

பி. ஆனந்த்குமார் (திமுக): சாலைகளை தேர்வு செய்தது யார்? குறிப்பிட்ட சாலைகளைத்தான் மாற்ற வேண்டும் என்று ஏதாவது விதி உள்ளதா?

தலைவர்: குளித்தலை நகராட்சியில் மொத்தம் 21 சாலைகள் அமைக்க குறிப்பாணை அனுப்பப்பட்டது. முதல் கட்டமாக 14 சாலைகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பி. ஆனந்த்குமார்: அண்ணாநகர் புறவழிச் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடம் தொடர்பாக பிரச்னை உள்ள போதிலும், அந்தப் பகுதியில் சாலை அமைக்க ரூ 23.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரச்னைக்குரிய இடத்தை நகராட்சி விலைக்கு வாங்க வேண்டும்.

தலைவர்: இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் நகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

துணைத் தலைவர் பல்லவிராஜா (மதிமுக): பிரதான பகுதியில் மட்டுமே தற்போது சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குடிசைப் பகுதியில் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தலைவர்: அடுத்த கட்டமாக அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் அமைக்கப்படும்.

பி. ராமலிங்கம், பி. ஆனந்த்குமார்: குளித்தலையில் கரூர்- திருச்சி நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, புறவழிச் சாலையையொட்டிய பகுதியில் புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் இரா. மாணிக்கமும் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்: தற்போது பேருந்து நிலையம் உள்ள இடம் கோயில் நிலமாகும். பேருந்து நிலையத்திலிருந்து வரும் வருமானத்தைவிட வாடகை அதிகமாக உள்ளது. இந்த நிலையில், புறநகர்ப் பேருந்து நிலையம் அமைந்தால் அதற்கு ஒதுக்குவதற்கு போதிய நிதி வசதியில்லை. இருப்பினும், இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.

டி. கலைமதி (சுயேச்சை): குளித்தலை நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக உள்ளது.

தலைவர்: இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.