Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ7.5 கோடி செலவில் 314 சாலைகள் சீரமைப்பு தொடக்கம் 10 நாளில் முடிக்க உத்தரவு

Print PDF

தினகரன் 21.10.2010

ரூ7.5 கோடி செலவில் 314 சாலைகள் சீரமைப்பு தொடக்கம் 10 நாளில் முடிக்க உத்தரவு

சென்னை, அக். 21: பழுதடைந்த நிலையில் உள்ள 314 சாலைகளை ரூ7.5 கோடி செலவில் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 10 நாளில் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு பணி பற்றிய விவரங்களை மாநகராட்சி இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று மேயர் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள சாலை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலை ஆகியவற்றை சீரமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் மேயர் கூறியதாவது: சென்னையில் பழுதடைந்த சாலைகளை கணக்கெடுத்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சிமெட்ரி சாலை, சூரியநாராயண சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, பிரகாசம் சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, அசோக் பில்லர் சாலை உட்பட 314 சாலைகளில் 4 லட்சத்து 12ஆயிரத்து 256 சதுர மீட்டர் பரப்பளவிற்கு சேதமடைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதை சீரமைக்க ரூ11 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாலைகள் அனைத்தும் பேருந்துகள் செல்லும் சாலைகள் ஆகும்.

முதல் கட்டமாக ரூ7.5 கோடி செலவில் 2 லட்சத்து 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு சாலைகளில் உள்ள பள்ளங்களை சமன் செய்தும், தேவையான இடங்களில் சாலையை அகழந்து எடுத்து தார்க்கலவை கொண்டு சீர்செய்யும் பணி இன்று(நேற்று) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பணி போர்க்கால அடிப்படையில் 10 நாட்களில் முடிக்கப்படும். சாலைகள் சீரமைக்கும் பணியை கண்காணிக்க 10 மண்டலங்களிலும் 10 மேற்பார்வை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாநகராட்சி மூலம் எந்தந்த சாலைகள் சீரமைக்கப்படுகிறது என்ற விவரம் மாநகராட்சி இணைய தளத்தில் முதல் முறையாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் 2,349 சாலைகள் 590 கி.மீ. நீளத்திற்கு ரூ172 கோடி செலவில் சிமென்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இது தவிர கடந்த 4 வருடங்களில் 136.45 கி.மீ. நீளத்திற்கு பேருந்து சாலைகள் ரூ61 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

துணை மேயர் சத்தியபாமா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். தி.நகர், ஜி.என்.செட்டி சாலையை சீரமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.