Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி சாலைகளை மேம்படுத்த ரூ. 82 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி               26.10.2010

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி சாலைகளை மேம்படுத்த ரூ. 82 லட்சம் ஒதுக்கீடு

திருக்காட்டுப்பள்ளி, அக். 25: திருக்காட்டுப்பள்ளி தேர்வு நிலைப் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளின் சாலை மேம்பாட்டுக்கு தமிழக அரசு ரூ. 82 லட்சத்தை வழங்கியுள்ளது என்றார் பேரூராட்சிக்குழுத் தலைவர் கோகிலா சிங்காரவேலு.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சிக்குழுக் கூட்டம் அதன் தலைவர் கோகிலா சிங்காரவேலு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சியின் அலுவலர்கள் த. குணசேகரன், நா. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

கோகிலா சிங்காரவேலு (காங்கிரஸ்): திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்குழு பொறுப்பேற்று 5-வது ஆண்டு தொடக்கவிழாவில் உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்களுக்கு நன்றி.

மேலும், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில தெற்கு வாடித்தெரு, வடக்கு வாடித்தெரு, ராயர் அக்ரஹாரம், சேதுரார் மண்டபம், பாலுண்டார் தெரு, தைக்கால்தெரு, கட்ட வெட்டியார் தெரு, அரிஜனத்தெரு, ஒன்பத்துவேலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்க, தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2010-11 நிதியாண்டுக்கு ரூ. 82 லட்சம் நிதி வரப்பெற்றுள்ளது.

ஜான்சன் தன்ராஜ் (அதிமுக): கடந்த 4 ஆண்டுகளில் எனது வார்டு பகுதியில் எந்தவித அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை.

. குணசேகரன் (தலைமை எழுத்தர்): பேரூராட்சி சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு அனைத்து வார்டுகளிலும் உள்ள பழுதான சாலைகளை படம் பிடித்து, அதற்கான உத்தேச தொகையும் கணக்கிட்டு ரூ. 1.29 கோடிக்கான பணிகளை வரைவு செய்து சென்னையில் உள்ள இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தோம். தொடர்ந்து, உயர் அலுவலர்கள் இங்கு வந்து ஆய்வு செய்ததில் சில சாலைகளில் மட்டும் பணிகளை மேற்கொள்ள ரூ. 82 லட்சம் நிதி ஒதுக்கினர். பின்வரும் காலங்கில் நிதி வந்தால் உங்கள் பகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆர். ராகவன் (திமுக): திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் உள்ள வார்டுகளிலேயே அதிக அளவில் வரிவசூல் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும் பகுதி எனது பகுதிதான். என்னுடைய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வதில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

. ரகமத்துல்லா (அதிமுக): எனது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் பேரூராட்சி நிர்வாகம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றாவிட்டால் நவ. 10 ஆம் தேதி வார்டு மக்களை அழைத்து வந்து பேரூராட்சி நிர்வாகம் முன்பாக உண்ணாவிரதம் இருப்போம்.

. குணசேகரன் (தலைமை எழுத்தர்): உங்கள் பகுதிகளின் அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த வாரத்துக்குள் செய்துதரப்படும்.

பேரூராட்சிக்குழு உறுப்பினர்கள் நா. குணசேகரன், . வளர்மதி, . மணிமேகலை, . இளங்கோவன், மா. கண்ணகி, எஸ். ரதி, மங்கையர்கரசி, மெய்யழகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.