Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சை நகராட்சியில் ரூ.22.96 கோடி பணிகள் டிசம்பர் இறுதியில் நிறைவு: மண்டல இயக்குனர் தகவல்

Print PDF

தினமலர்               31.10.2010

தஞ்சை நகராட்சியில் ரூ.22.96 கோடி பணிகள் டிசம்பர் இறுதியில் நிறைவு: மண்டல இயக்குனர் தகவல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழக அரசால் தஞ்சை நகர மேம்பாட்டு பணிகளுக்கு ரூபாய் 25 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், தஞ்சை நகராட்சி மூலம் சாலை மற்றும் சுகாதார வளாகம் அமைக்க ரூபாய் 22 கோடியே 96 லட்சம் மதிப்பில் 123 பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் சாந்தி கூறியதாவது: தஞ்சை நகராட்சி பகுதியில் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நகரின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து உலகத்தரத்தில் சாலைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தஞ்சை நகராட்சியில் ரூபாய் 22 கோடியே 96 லட்சம் மதிப்பில் 123 பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டபோது பழுதடைந்த 97 சாலை மேம்பாட்டுக்காக ரூபாய் 16 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுவரை 21 சாலை பணிகள் மிகவும் தரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதேபோல், நகரின் ஐந்து முக்கிய சாலைகள் ரூபாய் இரண்டு கோடியே 61 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மருத்துவக்கல்லூரி சாலையில் ரூபாய் 70 லட்சம் மதிப்பில் புதிய மின்விளக்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை நகரின் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூபாய் இரண்டு கோடியே 20 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நகரின் மூன்று முக்கிய இடங்களில் ரூபாய் 44லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பெரியகோவில் அருகாமையில் உள்ள ராஜராஜசோழன் சிலை பூங்கா வளாகம் ரூபாய் 25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் மதிப்பில் வழிகாட்டு பலகை அமைக்கப்பட்டுள்ளன.

இப்பணிகள் அனைத்தும் மிகவும் தரமாகவும், 20 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ள அளவுகளின்படி அமைக்கப்பட்டு வருகின்றன. அனுமதிக்கப்பட்டுள்ள 123 பணிகளில் 44 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தமிழக அரசு அறிவித்துள்ள நகராட்சிகளுக்கான ரூபாய் 1,000 கோடி கான்கிரீட் சாலைப்பணிகளில் தஞ்சை நகராட்சிக்கு 17 சாலை மேம்பாட்டுக்காக ரூபாய் மூன்று கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நகராட்சி வளர்ச்சி பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதியில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. இவ்வாறு நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சாந்தி தெரிவித்தார்.

தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி செல்லும் சாலை தார்சாலையாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளதையும், அருளானந்த நகர் ஐந்தாவது குறுக்குத்தெரு சாலை சிமெண்ட் சாலையாக மேம்பாடு செய்யப்பட்டு வருவதையும் நகராட்சிகள் மண்டல நிர்வாக இயக்குனர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மண்டல நிர்வாக பொறியாளர் ராஜசேகரன், நகராட்சி கமிஷனர் நடராஜன், பொறியாளர் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.