Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறப்பு சாலை திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது

Print PDF

தினகரன்                  02.11.2010

சிறப்பு சாலை திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது

வேலூர், நவ.2: முதல்வர் அறிவித்த சிறப்பு சாலை திட்டத்துக்கான டெண்டர் விடும் பணி நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 36,759 கி.மீ. நீள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 19,581 கி.மீ. நீள சாலைகள் மழையாலும், குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்டதாலும் சேதம் அடைந்துள்ளன. இதில் 5 ஆயிரம் கி.மீ. நீள சாலை மிகவும் பழுதடைந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சாலைகள் திட்டம் என்ற திட்டத்தை கடந்த சுதந்திர தினத்தன்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்த நிதியைக் கொண்டு பழுதடைந்துள்ள சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. முக்கிய சாலைகள் கான்கிரீட் சாலைகளாகவும், அகலம் குறைந்த சாலைகள் அகலமாகவும் மாற்றப்படுகின்றன.

இந்த சிறப்புசாலை திட்டத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 9 மாநகராட்சிகளிலும், 149 நகராட்சிகளிலும், 560 பேரூராட்சிகளிலும் கடந்த மாதம் 23ம் தேதி முதல் சிறப்பு சாலை திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கு நேற்று கடைசி நாளாகும். தமிழகம் முழுவதும் நேற்று மாலை 3 மணிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்கள் முன்னிலையில் பெட்டிகள் திறக்கப்பட்டன. அதில் குறைந்த ஒப்பந்த புள்ளிகளை குறிப்பிட்டிருந்தவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளிலும் நேற்று சிறப்பு சாலை திட்டத்துக்கான டெண்டர் விடப்பட்டன.

இதையடுத்து சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் சாலை அமைக்கும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது