Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மந்தகதியில் வேளச்சேரி - தரமணி சாலை விரிவாக்க பணிகள்

Print PDF

தினமலர்             10.11.2010

மந்தகதியில் வேளச்சேரி - தரமணி சாலை விரிவாக்க பணிகள்

வேளச்சேரி : வேளச்சேரி-தரமணி இடையே 24.58 கோடி ரூபாய் ம திப்பிலான சாலை விரிவாக்கப் பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். வரும் தேர்தலுக்குள் போர்கால அடிப்படையில் பணிகள் முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து தரமணி, ராஜிவ்காந்தி சாலையை இணைக்கும் இணைப்பு சாலை விரிவாக்கம் செய்ய, பல ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பக்கட்டப் பணிகள் துவக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதல் பணிகள் துவங்கின. உலக வங்கி திட்டத்தின் கீழ் 24.58 கோடி ரூபாய் மதிப்பில் 3.6 கி.மீ., தூரத்திற்கு இச்சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

 சாலையின் அகலம் 30.5 மீட்டர் இதில், 15.25 மீட்டர் அகலம் கொண்ட இருவழிப்பாதை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பக்க தார் சாலையின் அகலம் 10.45 மீட்டர். சாலை ஓரத்தில் 2 மீட்டர் அகலத்திற்கு சைக்கிள் பாதை அமைகிறது. அதையடுத்து, மாநகராட்சி மழைநீர் கால்வாய் மேல் நடைபாதையும் அமைகிறது. சென்டர் மீடியன் 1.2 மீட்டர் அகலம் கொண்டது. அதில், மின்விளக்கு வசதி செய்யப்படுகிறது. தற்போது, வேளச்சேரியில் இருந்து இடது பக்கப் பாதை பணிகள் நடந்து வருகின்றன. அது முடிந்த பிறகு போக்குவரத்து மாற்றம் செய்து வலதுபக்க பணிகள் துவக்கப்படவுள்ளன. ஆனால், சாலை அமைக்கும் பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன. சாலை விரிவாக்கத்திற்காக கருங்கல் ஜல்லி கொட்டி பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை சாலை கூட முழுமையாக அமைக்கப்படவில்லை. சாலையின் பக்கவாட்டில் மழை நீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளமும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இதுகுறித்து பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு இறுதியில் சாலைவிரிவாக்கப்பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், சென்டர்மீடியன், கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் அனைத்தும் அரைகுறையாகவே நிற்கின்றன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, மழைக்காலம் துவங்கிவிட்டதால் பணிகள் நிறுத்த வாய்ப்புள்ளது. அடுத்து தேர்தல் வரவுள்ளதால், பணிகள் அனைத்தும் அடுத்த ஆறு மாதங்களுக்கு கிடப்பில் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்படைந்து விடுவர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் நேரடி பார்வையிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து, போர்கால அடிப்படையில் பணிகளை துவக்கி வரும் தேர்தலுக்குள் சாலை விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.