Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போக்குவரத்து நெரிசலை குறைக்க பச்சையப்பன் சாலை சந்திப்பை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன்                    19.11.2010

போக்குவரத்து நெரிசலை குறைக்க பச்சையப்பன் சாலை சந்திப்பை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு

சென்னை, நவ.19: கே.கே.நகர் மற்றும் பச்சையப்பன் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நிலம் கையகப்படுத்தி சாலை அகலப்படுத்தப்படும் என்று மேயர் தெரிவித்தார்.

கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். கே.கே.நகர் பிரதான சாலை அகலமாக இருந்தாலும் பச்சையப்பன் சாலை சந்திப்பு குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் மேயரிடம் தெரிவித்தனர். இந்த சாலை சந்திப்பை அகலப்படுத்த தேவையான நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி மாநகராட்சி நிலம் மற்றும் உடமைத்துறை அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர். நகரில் வி.எம்.பாலகிருஷ்ணன் தெரு, சத்தியமூர்த்தி பிளாக், அன்னை சத்தியா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெளி நிலத்தை ஆய்வு செய்து பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல் அமைக்கவும், மேலும் சத்தியா நகர் பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே அப்பகுதி மக்களின் வசதிக்காக சிறிய பாலம் அமைக்க மதிப்பீடு தயார் செய்யும்படியும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சத்துணவு கூடங்கள், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் ஆகியவற்றையும் மேயர் ஆய்வு செய்தார்.

கோவிந்தன் தெருவிலுள்ள மீன் அங்காடி பகுதியில் மழைநீர் கால்வாயை தூர்வாருவதற்கு உத்தரவிட்டார். சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை மேயர் வழங்கினார். மண்டலக்குழுத் தலைவர் க.தனசேகரன், கவுன்சிலர் வெங்கடேசன், மண்டல அதிகாரி சுப்பையா உடன் இருந்தனர்.