Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடலூரில் பொதுநல அமைப்புகளின் "பந்த்' எதிரொலி ரூ.16.15 கோடியில் சாலை போட நகராட்சி உத்தரவு

Print PDF

தினமலர்                 25.11.2010

கடலூரில் பொதுநல அமைப்புகளின் "பந்த்' எதிரொலி ரூ.16.15 கோடியில் சாலை போட நகராட்சி உத்தரவு

கடலூர் : கடலூர் நகரில் பொது நல அமைப்புகள் நடத்திய "பந்த்' தின் எதிரொலியாக 16.15 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் மற்றும் தார் சாலைபோட நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சின்ன பின்னமானது. பணி முடிந்த தெருக்களில் புதிய சாலைகள் போடாமல் நகராட்சி காலம் கடத்தி வந்தது. இதனால் பொது மக்கள் நகராட்சி மீது வெறுப்படைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பொது நல அமைப்புகள் சார்பில் ஒரு நாள் "பந்த்' நடத்தப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு செய்தனர். தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சாலைப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் முதல்வர் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளில் சிமென்ட், மற்றும் தார் சாலை அமைக்க 16.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் முதல் கட்டமாக 32 சாலைகள் அமைப்பதற்கும், இதர 8 சாலைகளும் ஆக மொத்தம் 40 சாலைகளுக்கு 10.18 கோடியும், இரண்டாம் கட்டமாக 75 சாலைகளுக்கு 10.32 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. 17.65 கி.மீ., தூரத்திற்கு 8 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலைகள் அமைக்கவும், 2.11 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கவும் நேற்று சேர்மன் தங்கராசு பணி ஆணையை வழங்கினார். இதில் சிமென்ட் சாலை பணியை உடனே துவக்கிடவும், தார் சாலை பணிகளை மழைக் காலம் முடிந்தவுடன் துவக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அதேப்போன்று பண்ருட்டி நகராட்சியில் 1.33 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலையும், 1.39 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கவும், விருத்தாசலம் நகராட்சியில் 80.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலைகளும், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலைகளும், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 1.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 தார் சாலைகளும், சிதம்பரம் நகராட்சியில் 65 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை பணியும், 2.50 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலை பணிக்கும் நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் 16.15 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் மற்றும் தார் சலைகள் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு 31.3.2011க்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.