Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழையில் சேதமான 100 சாலைகள் 15ம் தேதிக்கு பிறகு சீரமைக்கப்படும்

Print PDF

தினகரன்          01.12.2010

மழையில் சேதமான 100 சாலைகள் 15ம் தேதிக்கு பிறகு சீரமைக்கப்படும்

சென்னை, டிச.1: சேதமான சாலைகள் 15ம் தேதிக்கு பிறகு சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆணையர் தா.கார்த்திகேயன், துணை மேயர் சத்தியபாமா முன்னிலை வகித்தனர்.

பின்னர் மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கோயம்பேடு அருகில் உள்ள தெற்காசிய விளையாட்டு கிராமம் பகுதியில் 195 சதுர மீட்டர் நிலம் நிரந்தரமாகவும், பிராட்வே பேருந்து நிலைய நடைபாதை அமைந்துள்ள இடத்தில் பூமிக்கு கீழே 845 சதுர மீட்டரும், பூமிக்கு மேலே 285 சதுரமீட்டர் நிலம் நிரந்தரமாகவும் 644 சதுர மீட்டர் நிலம் தற்காலிகமாகவழங்குதல் உள்பட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மழையால் 4.35 லட்சம் சதுர மீட்டர் சாலை சேதமடைந்தது. இதை சீரமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு அக்டோபர் 18ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. பருவ மழை தீவிரமடைந்ததால் அந்த பணி அக்டோபர் 27ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. மழையால் நூறு பேருந்து சாலைகள் சேதமடைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசு நிதி உதவி செய்யும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் 15ம் தேதிக்கு பிறகு இந்த சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.