Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூரில் சாலை விரிவாக்கப் பணி 3ம் கட்ட ஆய்வு கூட்டம்

Print PDF

தினகரன்                 06.12.2010

திருவொற்றியூரில் சாலை விரிவாக்கப் பணி 3ம் கட்ட ஆய்வு கூட்டம்

திருவொற்றியூர், டிச.6: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ11.5 கோடி செலவில் சுங்கச்சாவடி முதல் எர்ணாவூர் மேம்பாலம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 65 அடி சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், மந்தகதியில் பணிகள் நடக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தொடர்ந்து நடக்கிறது.

திருவொற்றியூரில் ரூ88 கோடியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்ட பணியும் முடியவில்லை. பள்ளம் தோண்டப்பட்டதோடு, மாதக்கணக்கில் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், சாலை விரிவாக்கம், பாதாளச் சாக்கடை பணிகளை துரிதப்படுத்த 3ம் கட்ட ஆய்வு கூட்டம் திருவொற்றியூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் கலெக்டர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். முடிந்துள்ள பணிகள் மற்றும் முடிவடையாத பணிக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், பொன்னேரி ஆர்டிஓ குமார், மாதவரம் தாசில்தார் உமா, நகராட்சி தலைவர் ஜெயராமன், நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.