Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ 135 கோடியில் சென்னை சாலைகள் புதுப்பிக்கப்படும்: மேயர்

Print PDF

தினமணி                  10.12.2010

ரூ 135 கோடியில் சென்னை சாலைகள் புதுப்பிக்கப்படும்: மேயர்

சென்னை, டிச.10: சென்னையில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட 1312 சாலைகள் ரூ 135 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளதாக மாநகர மேயர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

இதுகுறித்து மேயர் கூறியதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பருவ மழையினால் ஏற்பட்டுள்ள சாலை பாதிப்புகளை சரிசெய்ய முதல்வர் கருணாநிதி சென்னை மாநகராட்சியின் மீது சிறப்பு கவனம் செலுத்தி மாநகராட்சிக்கு சிறப்பு சாலைகள் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

சென்னையில் 154 பேருந்து சாலைகள் 96.8 கி.மீ. நீளத்திற்கு ரூ.47.70 கோடியிலும், 112 உட்புறச் சாலைகள் 49.5 கிமீ. நீளத்திற்கு ரூ.12.40 கோடியிலும் மொத்தம் ரூ.60.10 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு குறுகிய கால ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. 4 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் ஒட்டுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதில் 10 நாட்களில் 91 ஆயிரத்து 800 சதுர மீட்டர் அளவிற்கு ரூ.2.2 கோடி செலவில் ஒட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

44 பேருந்து சாலைகள் 21.2 கி.மீ நீளத்தில் மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடியே 15 லட்சம் செலவில் ஒப்பந்தங்கள் தயார் நிலையில் உள்ளன. 778 உட்புறச் சாலைகள் 186.21 கி.மீ. நீளத்திற்கு ரூ.39.73 கோடி செலவில் திட்ட மதிப்பீடுகள் தயாரித்தல் மற்றும் ஒப்பந்தங்கள் கோருதல் என பல்வேறு நிலைகளில் உள்ளன. 62 குடிசைப்பகுதிகளில் பழுதடைந்த 52.66 கி.மீ. நீளமுள்ள 224 கான்கிரீட் சாலைகள் ரூ.5.46 கோடி செலவில் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட உள்ளன.

அரசு நிதி ரூ.60.10 கோடி, மாநகராட்சியின் நிதியிலிருந்து ரூ.75 கோடி என மொத்தம் ரூ.135 கோடி செலவில் சென்னை மாநகரில் 1312 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இப்பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்பட்டு 2011 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். புதுப்பிக்ககப்படும் சாலைப்பட்டியல் சென்னை மாநகராட்சி இணைய தளமான WWW.chennaicorporation.gov.in ல் நாளை மாலைக்குள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படும் என்று மேயர் தெரிவித்ததாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.