Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உக்கடம் மேம்பாலம், 2ம் கட்ட மண் பரிசோதனை துவங்கியது

Print PDF

தினகரன்     10.08.2012

உக்கடம் மேம்பாலம், 2ம் கட்ட மண் பரிசோதனை துவங்கியது

கோவை, : உக்கடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான இரண்டாம் கட்ட மண் பரிசோதனை நேற்று துவங்கியது.கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரிக்கிறது. வாகன பெருக்கத்துக்கு ஏற்ப சாலைகள் விரிவுபடுத்தப்படவில்லை. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை செல்வதற்கு சாலையை விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு பக்கம் உக்கடம் பெரியகுளம், மறுபக்கம் பள்ளமான வயல்வெளி. இவை இரண்டும் சாலை விரிவாக்கத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை சுமார் ஒரு கி.மீ தூரம் மேம்பாலம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணியில் மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். உத்தேச மதிப்பீடு தயாரித்து தமிழக அரசிடமிருந்து நிதியுதவி பெற திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், இச்சாலையின் ஒருபுறம் மண் பரிசோதனை செய்யும் பணி கடந்த வாரம் துவங்கியது. ஒரு வார காலத்தில் ஒருபுறம் முழுவதும் மண் பரிசோதனை நிறைவடைந்து விட்டது. தற்போது, சாலையின் மறுபுறம் மண் பரிசோதனை செய்யும் பணி நேற்று துவங்கியது.

இப்பணி அடுத்த ஒருசில தினங்களில் நிறைவடைந்துவிடும், அதன்பிறகு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி நிதியுதவி பெறப்படும் என மாநகராட்சி பொறியாளர்கள் கூறினர்.