Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குமரி மாவட்டத்தில் ரூ.11.63 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

Print PDF
தினமணி         26.03.2013

குமரி மாவட்டத்தில் ரூ.11.63 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்


கன்னியாகுமரி மாவட்டத்தில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக ரூ.11.63 கோடியில், 90.2 கி.மீ. தொலைவுக்கு, 46 சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் நபார்டு சாலைகள் திட்டத்தின் கீழ் 31 கி.மீ. தொலைவுக்கு 9 சாலைப் பணிகள் ரூ.4.74 கோடி மதிப்பீட்டில் தோவாளை, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், முன்சிறை, மேல்புறம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் 8 பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட காரியங்கோணம் முதல் கொள்ளந்திருத்தி வரை 9 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஒருங்கிணைந்த தொகுப்பு நிதி திட்டத்தில்  பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பேச்சிப்பாறை பகுதிக்கு உள்பட்ட பழங்குடி மக்களுக்காக 12 கி.மீ. தொலைவுக்கு 4 சாலைப் பணிகள், 13 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் ரூ.3.13 கோடியில் நடைபெற்று வருகின்றன.

மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மழையால் சாலை பாதிக்காதவாறு நடைபெற்று வரும் இப் பணிகளில் ஒரு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

13-வது மான்யக் குழுத் திட்டத்தின் கீழ் 42 கி.மீ. தொலைவுள்ள 30 சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ.3.5 கோடியில் மாவட்டத்திலுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 29 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் வகையில் பிளாஸ்டிக் சாலை அமைக்கும்  திட்டத்தின் கீழ் 5.6 கி.மீ. தொலைவில் ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, மேல்புறம் ஊராட்சி ஒன்றியங்களில் தலா 1 பணி வீதம் 3 சாலைப் பணிகள் ரூ. 40.00 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், பொறியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவும், ஜல்லி, தார் கலவை மாதிரிகள் சுங்கான்கடையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு  பரிசோதனை மையத்தில் சோதனை செய்யப்பட்டு தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே பட்டியல் தொகை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் ஆட்சியர்.