Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகர்கோவில் ரயில்வே சாலையை பராமரிக்க நகராட்சி முடிவு

Print PDF
தினமணி        20.04.2013

நாகர்கோவில் ரயில்வே சாலையை பராமரிக்க நகராட்சி முடிவு

நாகர்கோவில் ரயில்வே சாலையைப் பராமரிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

நாகர்கோவில் கோட்டாறு முதல் இடலாக்குடி வரையுள்ள ரயில்வே சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக கன்னியாகுமரி உள்ளிட்ட பிற இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சாலையை சரிசெய்யக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தியும், ரயில்வே எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இந்த சாலையை நாகர்கோவில் நகராட்சி எடுத்து பராமரிக்க வேண்டும் என குமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் நகராட்சி தலைவர் எம். மீனாதேவ், ஆணையர் ராஜன், பொறியாளர் ஜார்ஜ், துணைத் தலைவர் சைமன் ராஜ், ரயில்வே பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம், ரயில்வே கோட்டப் பொறியாளர் அசோக் பெர்னான்டோ, வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், நகராட்சி உறுப்பினர்கள் ஸ்ரீமணிகண்டன், பெருமாள்பிள்ளை, செல்வம் உள்ளிட்டோர் சென்று சாலையை வியாழக்கிழமை சென்று பார்வையிட்டனர்.

பின் நகராட்சி சார்பில் ரயில்வே அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. அதில் கோட்டாறு-இடலாக்குடி வரையிலான ரயில்வே சாலையையும் ஒழுகினசேரியிலிருந்து ரயில் நிலையம் வரையிலான சாலையையும் நகராட்சியிடம் ஒப்படைத்தால் பராமரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒழுங்கினசேரி முதல் ரயில் நிலையம் வரையிலான சாலையில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு உள்ளதால் அந்த சாலையை நகராட்சியிடம் ஒப்படைப்பதில் உள்ள சிரமம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கோட்டாறு முதல் இடலாக்குடி வரையிலான ரயில்வே  சாலையை நகராட்சி பராமரிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.