Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூரில் ரூ.16 கோடியில் நவீன தார்ச் சாலைகள்

Print PDF

தினமணி               18.06.2013

திருவொற்றியூரில் ரூ.16 கோடியில் நவீன தார்ச் சாலைகள்

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.16 கோடியில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைக்கும் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி. உடன், மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர்.
திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.16 கோடியில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைக்கும் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி. உடன், மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர்.

திருவொற்றியூரில் ரூ.16 கோடியில் நவீன தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

 சென்னை மாநகராட்சி 6-வது கோட்டத்திற்குட்பட்ட திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் ரூ.10 கோடியில் நவீன தார்ச்சாலை அமைக்கும் பணிகளும், இதர கோட்டங்களில் சுமார் ரூ.6 கோடி மதிப்பீட்டிலான பணிகளும் என 32 தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பணியாணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.    இப்பணிகளுக்கான தொடக்க விழா திங்கள்கிழமை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் நடைபெற்றது.

சென்னை மாநகர மேயர் சைதை எஸ்.துரைசாமி தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மாவதரம் வி.மூர்த்தி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் மேயர் துரைசாமி பேசியது: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திருவொற்றியூர் நகரம் கடந்த 18 மாதங்களில் ஏற்கெனவே இருந்ததைவிட பன்மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள 400 சாலைகளையும் நவீன தார்ச்சாலைகளாகவும், கான்கிரீட் சாலைகளாகவும் மாற்றும் பணி தொடங்கப்பட்டு, படிப்படியாக பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ரூ.16 கோடியிலான சாலை அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடைந்தவுடன் உட்புறச் சாலைகளில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு, பின்னர் நெடுஞ்சாலையில் செல்லும் பிரதான கால்வாயுடன் இணைக்கப்படும். 

ரூ.15 கோடியில் தெருவிளக்குகள்: திருவொற்றியூர் மண்டலத்தில் நவீன தெருவிளக்குகள் அமைக்க ரூ.15 கோடியை மாநகராட்சி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு மழைநீரை அதில் நிரப்பும் வகையில் பணிகள் நடைபெற்றுள்ளன. ஏற்கெனவே இருந்த பூங்காக்கள் சீர்செய்யப்பட்டு, மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு புதுப் பொலிவு பெற்றுள்ளன.

கடலோரப் பகுதியான திருவொற்றியூரில் மாநகராட்சி சார்பில் நவீன மீன் அங்காடி விரைவில் அமைக்கப்பட உள்ளது. புதிய திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களும் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடையும்போது திருவொற்றியூர் நகரம் ஆச்சரியப்படத்தக்க வகையில் வளர்ச்சியைப் பெறும் என்றார் துரைசாமி.

நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், துணை மேயர் பெஞ்சமின், மண்டலக் குழுத் தலைவர் தன.ரமேஷ், உதவி ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து, மாமன்ற உறுப்பினர்கள் வின்சென்ட் அமுல்ராஜ், தன்ராஜ், சரவணன், கலையரசன், எழிலரசி, பிரபாகரன், அ.தி.மு.க நகரப் பொருளாளர் அம்பிகைதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.