Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூர் மாநகராட்சியில் சாலைப்பணிகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினத்தந்தி              21.08.2013

திருப்பூர் மாநகராட்சியில் சாலைப்பணிகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு

http://www.dailythanthi.com/dt/sites/default/files/pictures/roadwork.jpg

திருப்பூர் மாநகராட்சியில் சாலைப்பணிகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் விசாலாட்சி தெரிவித்தார்.

மக்களை தேடி மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஒட்டு மொத்த சிறப்பு துப்புரவுபணி, மக்களைத் தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் 30–வது வார்டு கேத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் அ.விசாலாட்சி தலைமை தாங்கினார்.

கமிஷனர் செல்வராஜ், துணைமேயர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர நல அதிகாரி செல்வக்குமார் வரவேற்றார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மேயரிடம் மனுக்களாக கொடுத்தனர். அவற்றைபெற்றுக்கொண்ட அவர், விரைவில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

ரூ.46 கோடி

நிகழ்ச்சியில் மேயர் விசாலாட்சி பேசும் போது கூறியதாவது:–

திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிக்காக கடந்த 1¾ஆண்டுகளில் ரூ.150 கோடியை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சி பகுதிகளும் அடிப்படை வசதி, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் கடந்த 1¾ ஆண்டில் 30–வது வார்டு பகுதியில் மட்டும் ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. மாநகராட்சி பகுதியில் சாலைப்பணிகளை மேம்படுத்த ரூ.46 கோடி நிதியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.

மழைநீர் சேகரிப்பு

திருப்பூர் மாநகராட்சியில் மட்டும் 4,500 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வீடு கட்டி வரி செலுத்தாதவர்களுக்கு உடனடியாக வரி போடப்படும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர்சேகரிப்பு அமைக்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து திருப்பூர் மாநகராட்சியை வளர்ச்சி அடைந்த மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கவுன்சிலர் சபரீஸ்வரன், நிலைக்குழு தலைவர்கள் பட்டுலிங்கம், பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் வாசுகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.