Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கழிவுகளால் சாலை அமைப்பு

Print PDF

தினமலர்             09.10.2013

பிளாஸ்டிக் கழிவுகளால் சாலை அமைப்பு

கிருமாம்பாக்கம்:தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை, பயன்படுத்தி பிளாஸ்டிக் தார் சாலை அமைக்கப்பட்டது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மறு சுழற்சி முறையில் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றை முழுமையாக மறு சுழற்சி செய்வதில்லை. இதனால், ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, தார் சாலை அமைக்கும் திட்டம் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார்சாலை அமைக்கும் திட்டம் இதுவரை பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை.

புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு 30 டன் பிளாஸ்டிக் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. அதில், ஒரு சில சதவீதம் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தபடாமல், எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.

இந்நிலையில், காட்டுக்குப்பத்தில் உள்ள பேக்கேஜிங் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வாசுதேவன் வழிகாட்டுதலின் படி, 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, நிறுவன வளாகத்தினுள் 200 மீட்டருக்கு பிளாஸ்டிக் தார் சாலை அமைக்கப்பட்டது.

இது குறித்து சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் கூறுகையில்"" தார் சாலை 3 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்கும். தார் சாலையில் மழை நீர் தேங்கினால் ஜல்லிகளுக்கும், தாருக்கும் இடையிலான பிணைப்பு குறைந்து, தார் சாலை விரைவில் குண்டும் குழியுமாக மாறிவிடும்.

ஆனால், பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி போடப்படும் தார் சாலைகள் குறைந்தது 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதனால், அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளும் அப்புறப்படுத்தப்படும். புதுச்சேரியில், தனியார் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலை அமைப்பது இதுவே முதல்முறை'' என்றார். பொது மேலாளர் ரவிசந்திரன், மேலாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.