Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நான்கு சாலைகளை உலக தரத்திற்கு மேம்படுத்த அரசு ஒப்புதல் ரூ.79.55 கோடி மதிப்பில் பணிகள் விரைவில் துவக்கம்

Print PDF

தினமலர்           21.11.2013

நான்கு சாலைகளை உலக தரத்திற்கு மேம்படுத்த அரசு ஒப்புதல் ரூ.79.55 கோடி மதிப்பில் பணிகள் விரைவில் துவக்கம்

சென்னை:சென்னையில் நான்கு முக்கிய சாலைகளை உலக தரத்திற்கு மேம்படுத்தும் திட்டத்திற்கு, 79.55 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அந்த பணிகளுக்கு சென்னை மாநகராட்சி விரைவில் ஒப்பந்தம் கோர உள்ளது.

சென்னையில், 31 சாலைகள் உலக தரத்தில் மேம்படுத்தப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. கோரிக்கை ஏற்பு இந்த திட்டத்தின் முதல்கட்டமாக நான்கு சாலைகளில் பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் (டுபிசல்) மூலம், தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதன்படி டாக்டர் அம்பேத்கர் சாலை (0.6கி.மீ.,), அசோக் நகர் 4வது நிழற்சாலை (1.25கி.மீ.,), அசோக் நகர் முதலாவது நிழற்சாலை (0.3கி.மீ.,), அசோக்நகர் 11வது நிழற்சாலை (1கி.மீ.,) ஆகிய நான்கு சாலைகள் இந்த திட்டத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த சாலைகளில் குடிநீர், கழிவுநீர் குழாய்கள், மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் கேபிள்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், குடிநீர், கழிவுநீர் குழாய்கள், மின்சாரம் மற்றும் பி.எஸ்.என்.எல்., கேபிள்களை மாற்றியமைக்க ஆகும் செலவுகளை திட்ட மதிப்பீட்டில் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை மாநகராட்சி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

இதன் அடிப்படையில் இந்த பணிகளுக்கான இறுதி விரிவான திட்ட அறிக்கை, 2012-13ம் ஆண்டின் ஒப்பந்தப்புள்ளி விலை நிலவரப்படி தயாரிக்கப்பட்டது.

சாலை பணிகளுக்கு 51.32 கோடி ரூபாயும், குடிநீர் வாரிய குழாய்களை மாற்றியமைக்க 17.77 கோடி ரூபாயும், மின்சார கேபிள்களை மாற்றியமைக்க 6.5 கோடி ரூபாயும், பி.எஸ்.என்.எல்., கேபிள்களை மாற்றியமைக்க 3.96 கோடி ரூபாயும் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.

மொத்தம் 79.55 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உலக தர சாலைகள் திட்டத்திற்கு, கடந்த ஜூன் மாதம் அரசின் நிர்வாக அனுமதி கோரப்பட்டது. தற்போது அரசு இந்த திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நான்கு சாலைகளும் தரமான கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படும். சாலையின் இருபகுதிகளிலும், 10 அடி அகலத்திற்கு நடைபாதைகள், கிரானைட் மூலம் அமைக்கப்படும்.

௪௫ மரங்கள்

அசோக் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைவதால், சைக்கிள் பாதை தனியாக அமைக்கப்படும். இந்த நான்கு சாலைகளில் மட்டும் 450 மரங்கள் வரை நடப்படும்.

பொதுமக்கள் அமர இருக்கை வசதி செய்யப்படும். மின்மாற்றிகள் தரைமட்டத்தில் இருந்து 5மீ., உயரத்தில் அமைக்கப்படும்.

குடிநீர் குழாய்கள் உட்பட அனைத்தும் மீண்டும் தோண்டத் தேவைப்படாதபடி திட்டமிட்டு சாலையோரம் பொருத்தப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

நான்கு சாலைகளில் இந்த நிதியாண்டில் பணிகள் துவங்கும் நிலையில், மற்ற சாலைகளில் ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.

குடிநீர் குழாய்கள் உட்பட அனைத்தும் மீண்டும் தோண்டத் தேவைப்படாதபடி திட்டமிட்டு சாலையோரம் பொருத்தப்படும்.