Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகரில் 376 கிமீ தொலைவு சாலைகளை நவீனப்படுத்த திட்டம்

Print PDF

தினமணி 11.11.2009

திருச்சி மாநகரில் 376 கிமீ தொலைவு சாலைகளை நவீனப்படுத்த திட்டம்


திருச்சி, நவ. 10: திருச்சி மாநகரில் 376 கிமீ தொலைவு சாலைகளை சர்வதேச தரத்துக்கு இணையாக நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்தத் திட்டத்தின் தொழில்நுட்பக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன உதவித் துணைத் தலைவர் ஆர். காயத்ரி பேசியது:

""தமிழகத்தில் முதன் முறையாக கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி அமைக்கப்படும் சாலைகள், சர்வதேச தரத்துக்கு இணையாகவும், 20 ஆண்டுகளுக்கு பழுது ஏற்படாமல் இருக்கும் வகையிலும் அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாலை ஓரங்களில் மரங்களும் வளர்க்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் பணிகள் முடிந்து 5 ஆண்டுகள் அவற்றைச் செயல்படுத்தி- பராமரித்த பின்னரே மாநகராட்சி வசம் ஒப்படைக்கும்.

புதை சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளும், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கரூர், இனாம்கரூர், ஆலந்தூர் மற்றும் வளரசவாக்கம் ஆகிய நகராட்சிகளும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாலைகள் அனைத்தும் புவி தகவல் அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். தெரு விளக்குகள், மழைநீர் வடிகால், நடைபாதைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக அமைக்கப்படும். இரு மருங்கிலும் சாலையை அகலப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தேவைக்கேற்ப மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கலந்தறிதற்குரியவர் மூலம் முதல் 9 மாதங்கள் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அடுத்த 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். மாநகராட்சி அளித்த விவரங்களின்படி, தற்போது 376 கிமீ சாலைகள் இத்திட்டத்தில் மேம்படுத்தப்படும்'' என்றார் காயத்ரி.

கூட்டத்தில் நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், கோட்டத் தலைவர்கள் எஸ். பாலமுருகன், ரெ. அறிவுடைநம்பி, ஜெரோம் ஆரோக்கியராஜ், . குமரேசன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவன ஆலோசகர் (சாலைகள்) டாக்டர் எம்.எஸ். ஸ்ரீனிவாசன், துணை மேலாளர் யு. விஜயராகவன், உதவி மேலாளர் ஆர். பிரதீப், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்ட பொறியாளர் எம். வைத்தீசுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 11 November 2009 09:30