Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைக்கு சேதமடைந்த ஹைவேவிஸ் மலைச் சாலையை ரூ.31 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை:ஆட்சியர்

Print PDF

தினமணி 14.11.2009

மழைக்கு சேதமடைந்த ஹைவேவிஸ் மலைச் சாலையை ரூ.31 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை:ஆட்சியர்

தேனி, நவ.13: தேனி மாவட்டத்தில் மழைக்கு சேதமடைந்த மலைச் சாலையை ரூ.31 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பி.முத்துவீரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழைக்கு வருசநாடு, மேகமலை, அகமலை, போடி-கொட்டகுடி மற்றும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கால் பலத்த சேதமடைந்துள்ளன.

இதில் அகமலை சாலை, ஹைவேவிஸ் பேரூராட்சி ஆகிய மலைக் கிராமப் பகுதிகளில் பாறைகள் உருண்டதில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகமலை சாலையில் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹைவேவிஸ் பேரூராட்சிப் பகுதிகளில் வென்னியாறு, மணலாறு, மேல்மணலாறு ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலும், மகாராஜா மெட்டுக்குச் செல்லும் வழியில் மூன்று இடங்களிலும் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை, ஆட்சியர் பி. முத்துவீரன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஹைவேவிஸ் பேரூராட்சி நிர்வாகம் மூலம் சேதமடைந்த மலைச்சாலையை சீரமைக்க ரூ.31 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகளை விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் பராமரிப்பில் உள்ள ஹைவேவிஸ் மலைச் சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்து, இச்சாலையை சீரமைத்து ஹைவேவிஸ் பகுதியை சிறந்த சுற்றுலாத்தலமாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ஆட்சியர். பேரூராட்சிகள் உதவி செயற் பொறியாளர் ஜோதிமுருகன், ஹைவேவிஸ் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:28