Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழையால் சேதமடைந்த சாலைகள் தாற்காலிகமாக சீரமைக்கப்படும்

Print PDF

தினமணி 18.11.2009

மழையால் சேதமடைந்த சாலைகள் தாற்காலிகமாக சீரமைக்கப்படும்

மதுரை, நவ. 17: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கனமழையால் சேதமடைந்துள்ள சாலைகள் தாற்காலிகமாக சீரமைக்கப்படும் என்று, மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 67, 68-வது வார்டு பழங்கானத்தம் பகுதிகளில் மேயர் ஜி. தேன்மொழி, ஆணையர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் கூறியதாவது:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சர்வதேச அளவில் சாலை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது, நகரில் 40 சதவீதம் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட வேண்டியுள்ளதால், இப்பணிகள் நிறைவுபெற்ற பின் சாலை அமைக்கும் பணி துவங்கும்.

எனவே, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் விரைவில் இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும். மூலக்கரை மயானம், ரோட்டரி சங்கம் மூலம் பராமரிக்கப்பட உள்ளது. இது விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

கடந்த 2 நாள்களாக மேயர், துணைமேயர் ஆய்வு செய்த 29-வது வார்டு பகுதிகளில், மேயரிடம் தெரிவிக்கப்பட்ட அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுள்ளன. மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை தாற்காலிகமாகச் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு மண்டலத்தில் வாரம் 2 வார்டுகள் வீதம் ஆய்வு மேற்கொண்டு, தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்றார் செபாஸ்டின். பின்னர், மேயர் கூறியதாவது: பாதாளச் சாக்கடையில் இருந்து நீர் நிரம்பி, வீடுகளுக்குள் கழிவுநீர் வருவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இப்பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து பாதாளச் சாக்கடையை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.சி. தெரு பின்புறம் உள்ள வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை உடனடியாக அகற்றவும், அவர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பழங்கானத்தம் சாவடித் தெருவில் குடிநீர் குழாய் தாழ்வாக இருப்பதால், சாக்கடை நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர்க் குழாயை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முனியாண்டிபுரத்தில் உள்ள சத்துணவு மையத்தில் பழுதடைந்துள்ள ஓடுகளை சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் மேயர்.

தொடர்ந்து, மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பரிசீலித்த மேயர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Last Updated on Wednesday, 18 November 2009 08:39