Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தரமான சாலையை உறுதி செய்ய கண்காணிப்புப் பணியில் பொறியாளர்: மேயர் மா. சுப்பிரமணியன்

Print PDF

தினமணி 31.12.2009

தரமான சாலையை உறுதி செய்ய கண்காணிப்புப் பணியில் பொறியாளர்: மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, டிச. 30: சென்னை மாநகரில் தரமான சாலை அமைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தீவிர கண்காணிப்புப் பணியில் மாநகராட்சி பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகரில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, தலைமைப் பொறியாளர் (பொது) முருகேசன், மேற்பார்வை பொறியாளர் மதியழகன், மண்டல அலுவலர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:

சென்னையில் 10 மண்டலங்களில் பழுதடைந்துள்ள சாலைகள் வரும் ஜனவரி 2}ம் தேதி முதல் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. ரூ. 45.83 கோடி செலவில் இந்த சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதில் 313 உட்புறச் சாலைகள் ரூ. 14.54 கோடி செலவிலும், 85 பஸ் வழிச் சாலைகள் 21.29 கோடி செலவிலும், சாலை ஒட்டுப் பணிகள் ரூ. 10 கோடி செலவிலும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சாலைகளின் தரம் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுகின்றன. எனவே தரத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை எழும்பூரில் உள்ள மத்திய வெப்பத் தார் கலவை நிலையத்தில் சுழற்சி முறையில் இளநிலை பொறியாளர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இதுபோல் ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை கண்காணிக்கவும், மாநகராட்சி பொறியாளர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளையும் இவர்கள் விழிப்புடன் கண்காணிப்பர். ஒப்பந்ததாரர்கள் தார்க் கலவை பெறும் தனியார் நிறுவனத்திலும், மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு மேற்கொள்வர்.

ஒப்பந்ததாரர்கள் தனியாரிடத்தில் எந்த அளவில் தார்க் கலவையை வாங்குகின்றனர் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் மேயர்.

Last Updated on Thursday, 31 December 2009 10:21