Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாட்டிற்கு இரு திட்டச் சாலைகள் தயார்

Print PDF

தினமலர் 06.01.2010

செம்மொழி மாநாட்டிற்கு இரு திட்டச் சாலைகள் தயார்

கோவை: கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டையொட்டி இரண்டு திட்டச் சாலைகளை மாநகராட்சி உருவாக்கி வருகிறது. அதற்கு தேவையான பல ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் இரு பெரும் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொடுத்துள்ளது.கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டை யொட்டி இரண்டு பெரிய திட்டச் சாலைகளை உருவாக்க அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அதன்படி ஆவாரம்பாளையத்தில் இருந்து அவிநாசிரோட்டை இணைப்பதற்கு ஒரு திட்டச்சாலையும், அவிநாசி ரோட்டில் இருந்து திருச்சி ரோட்டை இணைப்பதற்கு மற்றொரு திட்டச் சாலையும் உருவாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மின்சார எரியூட்டு மையத்திற்கு அருகில் உள்ள கருப்பாத்தாள் லேஅவுட் பகுதியில் 800 மீட்டர் தூரத்திற்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் காலியாக இருந்தது.இதை தனியார் பலர் ஆக்கிரமித்து, பழைய கார்களை நிறுத்தியிருந்தனர். சில பகுதிகள் புதர்களாக காணப்பட்டது.மாநகராட்சிக்கு சொந்தமான பகுதியை ஆக்கிரமித்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று முழுமையாக அகற்றினர்.

800
மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளில் இருந்த முட்புதர்கள், மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சில குடிசைகளும் இடித்து தள்ளப்பட்டன. இதற்கடுத்து முக்கால் ஏக்கருக்கு எஸ்.என்.ஆர்.,கல்லூரிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தால் தான் இணைப்பு சாலை தயாராகும் நிலை இருந்தது.மாவட்ட கலெக்டர் உமாநாத் அந்நிறுவனத்துடன் பேச்சு நடத்திய நிலையில், எஸ்.என்.ஆர்., நிறுவனம் இணைப்பு சாலைக்கு தேவையான முக்கால் ஏக்கர் நிலத்தை வழங்கியது.அவிநாசி ரோட்டையும், திருச்சி ரோட்டையும் இணைக்கும் இணைப்புச் சாலை ரங்கவிலாஸ் மில் ரோட்டில் துவங்கி, திருச்சி ரோடு வரை செல்கிறது. ஆரம்பத்தில் 500 மீட்டர் தூரத்திற்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் இருந்தாலும், இதன் தொடர்ச்சியாக உள்ள அரை ஏக்கர் பகுதி ரங்கவிலாஸ் மில்லிற்கு சொந்தமான இடம்.இந்த இடத்தை திட்டச்சாலைக்கு ஒதுக்கிக்கொடுக்க கலெக்டர் மில் நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி வருகிறார். மில் நிர்வாகமும் இடத்தை ஒதுக்கிக்கொடுக்க முடிவு செய்துள்ளது.