Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அவினாசி சாலை - பீளமேடு பகுதியை இணைத்து திட்டச்சாலை; மாநகராட்சி தீவிரம்

Print PDF

தினமலர் 18.02.2010

அவினாசி சாலை - பீளமேடு பகுதியை இணைத்து திட்டச்சாலை; மாநகராட்சி தீவிரம்

கோவை : கோவை - அவினாசி சாலையையும், பீளமேடு பகுதியையும் இணைத்து திட்டச்சாலை அமைக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

கோவை - அவினாசி ரோட்டை பீளமேடு எல்லைத்தோட்டம் ரோட்டுடன் இணைக்கும் வகையில் 40 அடி உத்தேச திட்டச்சாலைக்கு, "கோவை மாஸ்டர் பிளான்' சிங்காநல்லூர் விரிவு அபிவிருத்தித் திட்டம் 27ல் திட்டமிடப்பட்டு, கடந்த 1994ல் தமிழக அரசின் "கெஜட்டில்' வெளியிடப்பட்டது. திட்டச்சாலைக்காக, மூன்றரை ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முன்பே 1994ல் பி.எப்., (பிராவிடண்ட் பண்ட்) அலுவலர்களுக்காக 300 வீடுகளை கொண்ட குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கியது. உத்தேச திட்டச்சாலைக்கான இடத்தில் தலா எட்டு வீடுகள் வீதமாக இரண்டு "பிளாக்'குகள் கட்டும் பணி நடந்தது.மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி, பணியை நிறுத்தியது.

இன்று வரை கட்டட கட்டுமான பணி அஸ்திவார நிலையிலேயே உள்ளது. அனைத்து குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்ட பின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதனால், பீளமேட்டில் வசிக்கும் பல ஆயிரம் மக்கள், இந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ராதாகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர், கோவை முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சுற்றுச்சுவரை இடிக்க கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பி.எப்.,துறை, செஷன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. அங்கும் இதே உத்தரவு வழங்க, அதையும் எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு விசாரணையில் இருக்கும்போதே, கடந்த 2007ல் "பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ்' அமைப்பு, ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டிவிஷன் பெஞ்ச், இருதரப்பு வாதத்தையும் கேட்டது. "குறிப்பிட்ட பகுதியில் திட்டச்சாலை இல்லை' என, பி.எப்.,துறை சார்பில் வாதிடப்பட்டது. திட்ட சாலைக்கு ஆதாரமாக போட்டோ மற்றும் வரைபடங்களை பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் சமர்ப்பித்தது. உண்மை நிலையை அறிய, சென்னை வக்கீல் திருமூர்த்தியை ஒரு நபர் கமிஷனராக கோவைக்கு ஐகோர்ட் அனுப்பியது. கடந்த 2009, ஆக.22ல் கோவை வந்த அவர், சம்மந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டார். பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் கோபால், மாநகராட்சி அதிகாரிகள், பொது மக்கள், தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கினர்.

நேரடி ஆய்வுக்கு பின், திட்டச்சாலை வரைபடத்துடன் கூடிய அறிக்கை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. திட்டச்சாலையின் தற்போதைய நிலை குறித்து, மாநகராட்சி சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நகரமைப்பு அலுவலரும் தனியாக அறிக்கை கொடுத்தார். அதன் பின், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கடந்த ஆண்டு டிச.,17ல் தீர்ப்பு வழங்கியது. அதில், "பி.எப்., துறையின் கருத்தை பரிசீலித்து, திட்டச்சாலைக்கான மாற்று திட்டம் தயாரித்து, அதற்கு முறைப்படி நகர ஊரமைப்பு துறையின் அனுமதி பெற்று, திட்டச்சாலை அமைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.

நகல் கிடைத்த நான்கு வாரங்களுக்குள் உத்தரவை அமல்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தது. தீர்ப்பின் அடிப்படையில், திட்டச்சாலை அமைப்பதற்கு சில ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. பி.எப்.,குடியிருப்பு காம்பவுண்டுக்கு தென் வடல் பகுதியில் 20 அடி இடத்தை விட்டுத்தருவதாகவும், மீதி 20 அடி இடத்தை அதை ஒட்டியுள்ள தனியாரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுமாறும் பி.எப்.,துறை சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியிலும் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. ஒரு வேளை, தங்கள் வசமுள்ள இடத்தை தனியார் தர மறுக்கும்பட்சத்தில், பி.எப்.,குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே மாற்று வழியில் திட்டச்சாலையை கொண்டு செல்லவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஏதாவது ஒரு வகையில், திட்டச்சாலை அமைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இதற்கு இணைச் சாலையாக உள்ள ரங்கவிலாஸ் ரோடு, தற்போது விரிவு படுத்துவதை போல, திட்ட சாலை ரோட்டையும் விரைவாக அமைத்தால் பீளமேட்டில் வசிக்கும் பல ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்

Last Updated on Thursday, 18 February 2010 06:53