Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 2,000 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

Print PDF

தினமணி 17.03.2010

ரூ. 2,000 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

கும்பகோணம், மார்ச் 16: கும்பகோணம் உள்ளிட்ட 11 முக்கிய நகராட்சிப் பகுதிகளில் ரூ. 2,000 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளைச் செயல்படுத்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார் ஆய்வு நிறுவன இன்மாஸ் நிறுவனத் திட்ட மேலாளர் முருகன்.

தமிழ்நாடு நகர்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பாரம்பரியம் மிக்க நகரங்கள் உள்ளிட்ட நகர் பகுதிகளில் உலகத் தரத்திற்கு இணையான சாலைகளை அமைப்பதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் இத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வரும் நிறுவனமான இன்மாஸின் திட்ட மேலாளர் முருகன் கூறியது:

கும்பகோணம் உள்ளிட்ட 11 நகராட்சி பகுதிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு ரூ. 2,000 கோடி ஒதுக்கியுள்ளது. எதிர்வரும் 20 ஆண்டுகாலம் உழைக்கக்கூடிய அளவில், சாலைகள் உலகத் தரத்திற்கு இணையாக இருக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வெளிநாடுகளில் பூமிக்கு அடியில் தொலைபேசி வயர்கள், மின் வயர்கள் உள்ளிட்டவை "டக்ட்' முறையில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முறையை மேற்கண்ட நகரங்களிலும் செயல்படுத்துவற்காக அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறும் கூட்டமாக நடைபெற்றது.

குடிநீர், கழிவுநீர்,புதைச் சாக்கடைத் திட்டம், வடிகால், மின் வயர்கள், கேபிள், தொலைபேசி போன்றவை டக்ட் முறையில் அமைக்கப்பட்டால் தரமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்தோம். அதன் முதல் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நகரில், 7 வாய்க்கால்கள் உள்ளன. அவற்றைச் சீரமைத்து நடைப்பாலம், மேம்பாலம், சாலையோரப் பூங்கா, சுரங்கப் பாதை,போன்றவை அமைத்து நகர் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.

இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தது:

சுந்தரபாண்டியன்: நெருக்கடியான இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

ரவிச்சந்திரன்: என் வார்டு பகுதியில் புதைச் சாக்கடைக் குழாய் பதிக்கவில்லை. தேவையில்லாத இடங்களில் உள்ள நிழல்குடைகளை எடுத்துவிட்டு, தேவையான இடத்தில் அமைக்க வேண்டும்.

வசீகரன்: (கட்டடக் கலை பொறியாளர்) இத்திட்டத்தில் நகர் பகுதிகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அருகிலுள்ள பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளையும் சேர்க்கலாம். நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும். லஷ்மி விலாஸ் தெருவில் உள்ள திரையரங்கம் அருகில் ஓடும் கழிவு நீர்வாய்க்காலைச் சீரமைத்து, சாலை அமைத்தால் புதிய சாலை வசதி கிடைக்கும்.

வட்டாட்சியர் போஸ்: ஏ.ஆர்.ஆர். சாலை, செல்வம் திரையரங்க முகப்பு, பாலக்கரை ஆகிய இடங்களில் சிக்னல்கள் அமைக்க வேண்டும், தாராசுரம் சுங்கான்கேட், தாலுக்கா காவல் நிலையம் முன்புறம், மௌனசாமி மடத்துத்தெரு ஆகிய இடங்களில் வேகத் தடை அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனை, மூர்த்தி ரோடு வளைவு,நால் ரோடு ரவுண்டானா ஆகிய பகுதிகளில் நிரந்தரத் தடுப்பு அமைக்க வேண்டும்.

சுவாமிநாதன் (காவல்துறை உதவி ஆய்வாளர்): சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்த வேண்டும். இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சு.ப. தமிழழகன் தலைமை வகித்தார். ஆணையர் பூங்கொடி அருமைக்கண் வரவேற்றார்.

திருவிடைமருதூர் ஒன்றியக் குழுத் தலைவர் செ. ராமலிங்கம், நகர்மன்ற துணைத் தலைவர் தர்மபாலன், நகராட்சி அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய அதிகாரிகள், பி.எஸ்என்எல் அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 17 March 2010 10:24