Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

11 நகராட்சியில் உலக தரத்துடன் சாலைகள் இன்மாஸ் நிறுவன திட்ட மேலாளர் தகவல்

Print PDF

தினமலர் 19.03.2010

11 நகராட்சியில் உலக தரத்துடன் சாலைகள் இன்மாஸ் நிறுவன திட்ட மேலாளர் தகவல்

கும்பகோணம்: ''தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கும்பகோணம் உட்பட 11 நகராட்சி பகுதியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக தரத்துக்கு இணையான சாலை மேம்பாட்டு திட்டப்பணிகள் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,'' என இன்மாஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் முருகன் தெரிவித்தார். கும்பகோணம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இன்மாஸ் நிறுவனம் சார்பில் வரும் 20 ஆண்டுகளுக்கு உழைக்க கூடிய சாலை மேம்பாட்டு பணிகள் உட்பட பல வசதிகளை இந்நகராட்சி பகுதியில் செய்வதற்காக அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக்கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது.நகராட்சி தலைவர் தமிழழகன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பூங்கொடி அருமைக்கண் வரவேற்றார். திருவிடைமருதூர் யூனியன் தலைவர் ராமலிங்கம், தாசில்தார் போஸ், நகராட்சி துணைத்தலைவர் தர்மபாலன், நகராட்சி நகரமைப்பு முதுநிலை மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய பொறியாளர் ஸ்ரீதர், போலீஸ் எஸ்.., சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்மாஸ் நிறுவன திட்ட மேலாளர் முருகன் பேசியதாவது: தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாடு திட்டம் தமிழக அரசால் இரண்டு ஆண்டுக்கு முன் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள கும்பகோணம் உட்பட 11 நகராட்சிகள் தேர்வு செய்து அங்கு உலக தரம் வாய்ந்த சாலை மேம்பாடு செய்தல், சாலையோர பூங்கா, நடைபாலம், சுரங்கபாதை, மேம்பாலம் உட்பட அனைத்து வசதிகளை ஒருங்கே அமைக்க இரண்டாயிரம் கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தை ஓராண்டுக்குள் செயல்படுத்த இன்மாஸ் நிறுவனம் கடந்த இரு மாதமாக கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகள் இருக்கும் விதம், வடிகால்கள், வாய்கால்கள், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி ஆய்வு செய்து டிஜிட்டல் முறையில் தயாரித்துள்ளோம். பூமிக்கு கீழே குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு, டெலிஃபோன் இணைப்பு, மின்சார கம்பிகள் அமைக்க வசதியாக 'டக்ட்' முறை பயன்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்படும் பணிகள் செய்வதுபோல் நகராட்சியில் செய்யப்படும். தற்போது உள்ள சாலையின் தரம் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் கெட்டு விடுகிறது. இத்திட்டத்தில் அமையும் சாலைகள் 20 ஆண்டு நீடித்து இருக்கும். தொலைநோக்கு பார்வையில் உலக தரத்துக்கு இணையான சாலைகள் அமைக்கவேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது.

அதற்காக இப்பகுதியில் ஆய்வு செய்கிறோம். இந்நகரில் 173 கி.மீ., தூரம் சாலைகள், 780 தெருக்கள் உள்ளன. சாலையின் அகலம் குறுகலாக உள்ளது. இங்கு ஏழு வாய்கால்கள் தண்ணீர் ஓடாமல் உள்ளது. அதை தூர் எடுத்து சரி செய்யவேண்டும். டக்ட் சிஸ்டம் முறையில் சாலைக்கு கீழே மின்வாரியம், தொலைபேசி, குடிநீர் குழாய்கள் அமைப்பது என ஒவ்வொரு துறைக்கும் டக்ட் வசதி ஒதுக்கப்படும். இணைப்பு சாலை வசதிகள் அதை ஒட்டியிருக்கின்ற பகுதியில் வடிகால்கள், பஸ் குடைகள் அமைக்கவேண்டும். இந்த நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் 100 சதவீதம் தரமானதாக அமைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தயாரித்து எங்கள் மூலம் ஒப்பந்தக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் தொடங்கி முடிந்தவுடன் அதிலிருந்து ஐந்தாண்டு பராமரிப்பு பணியும் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Last Updated on Friday, 19 March 2010 06:31