Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திட்டச்சாலைகள் அமைக்க அரசாணை; ரூ.13.25 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 24.03.2010

திட்டச்சாலைகள் அமைக்க அரசாணை; ரூ.13.25 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை, : கோவை நகரில் முதன் முறையாக, உள்ளூர் திட்டக்குழும நிதியில், 13 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் 3 இணைப்புச் சாலை அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை நகர முழுமைத் திட்டத்தில் உத்தேச திட்டச்சாலையாக பல இடங்கள் காண்பிக்கப்பட்டாலும், அவை காகிதங்களில் மட்டுமே உள்ளன. இவை அமைக்கப்படாததால் மக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திட்டச்சாலை அமைக்க வேண்டிய கடமை, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது. ஆனால், நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி, இந்த வேலையை மாநகராட்சி நிர்வாகம் தொடுவதே இல்லை. இதற்கான நிதி வழங்க வேண்டிய உள்ளூர் திட்டக் குழுமமும் இதற்காக மெனக்கெடுவதில்லை.
அதனால், கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தில் மேம்பாட்டுக் கட்டணமாக பெறப்பட்ட 20 கோடி ரூபாய் நிதி, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது.

இந்த நிதியைப் பயன் படுத்தி, 3 திட்டச்சாலை அமைக்க, கலெக்டர் உமாநாத் முயற்சி எடுத்தார்; அதற்கேற்ப, செம்மொழி மாநாடும் அறிவிக்கப்பட்டது. செம்மொழி மாநாட்டுக்காக, கோவை நகரில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதே காலகட்டத்தில், இந்த திட்டச்சாலைகள் அமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி அரசுக்கு கலெக்டர் வலியுறுத்தினார். அதன் பலனாக, மூன்று திட்டச்சாலை அமைக்க தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை சார்பில், மார்ச் 22ல் ஓர் அரசாணை (எண்:65) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, 13 கோடியே 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரங்கவிலாஸ் மில் திட்டச்சாலைக்கு 6 கோடியே 77 லட்ச ரூபாயும், நவ இந்தியா ரோடுக்கு 5 கோடியே 80 லட்ச ரூபாயும், மசக்காளிபாளையம் திட்டச்சாலைக்கு 68 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிலங்களை கையகப்படுத்த ஒதுக்கியுள்ள தொகை, 4 கோடியே ஒரு லட்ச ரூபாய். ரோடு அமைத்தல், பாலங்கள், தெரு விளக்கு, சாக்கடை வசதி ஆகியவை அனைத்துக்கும் சேர்த்து 9 கோடியே 24 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதியை கோவை உள்ளூர் திட்டக்குழும நிதியிலிருந்து ஒதுக்க, இந்த அரசாணையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

செம்மொழி மாநாட்டு சிறப்பு அலுவலரின் பரிந்துரையின் பேரில், இந்த அரசாணை பிறப்பிக்கப்படுவதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் அசோக் டோங்ரே தெரிவித்துள்ளார். இந்த 3 இணைப்புச் சாலைகளை அமைக்கும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். மேம்படுத்தப்படவுள்ள இந்த 3 திட்டச்சாலைகளில் ரங்கவிலாஸ் மில்ரோடு, அவினாசி ரோட்டையும், திருச்சி ரோட்டையும் இணைக்கும். அவினாசி ரோட்டையும், சின்னச்சாமி ரோட்டையும் இணைக்கும் வகையில் 100 அடி அகலத்தில் நவ இந்தியா ரோடு அமைக்கப்படும்.

மசக்காளிபாளையம் திட்டச்சாலையின் ஒரு பகுதி, 60 அடிக்கு அகலமாகும். இந்த 3 இணைப்புச் சாலைகள் அமைவதால், அவினாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் ஓரளவுக்கு நெரிசல் குறையும். பல ஆண்டுகளாக கனவாயிருந்த இந்த 3 ரோடுகளும், செம்மொழி மாநாட்டால் நனவாகின்றன.

இன்னும் இருக்கு பல கோடி! கோவை உள்ளூர் திட்டக்குழுமத்திடம் இருந்த 20 கோடி ரூபாய் நிதியில், 13 கோடியே 25 லட்ச ரூபாய், இந்த ரோடுகளுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதேபோன்று, நகர ஊரமைப்புத்துறையின் நிதியிலிருந்து 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் பல ரோடுகளும் மேம்படுத்தப்படுகின்றன. தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்ததாக கோவை நகரிலிருந்தே அதிகமான அளவுக்கு 45 கோடி ரூபாய், கட்டமைப்பு நிதியாக வசூலிக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லாமலும், விதிமீறியும் கட்டிய கட்டடங்களில் இருந்து இன்னும் பல கோடி ரூபாய் நிதி வசூலிக்க வேண்டியுள்ளது. அந்த நிதியை வசூலித்தாலே, கோவை நகரில் இன்னும் ஏராளமான மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்கான நிதி கிடைத்து விடும்.

Last Updated on Wednesday, 24 March 2010 10:38