Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உலகத் தரம் வாய்ந்த சாலைப் பணிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 16.04.2010

உலகத் தரம் வாய்ந்த சாலைப் பணிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

மதுரை, ஏப். 15: மதுரை மாநகராட்சியில் உலகத் தரம் வாய்ந்த சாலைப் பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அதை முதலில் நான்கு வார்டுகளில் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயர் கோ. தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு சேவை நிறுவன ஆலோசகர் எம்.எஸ். சீனிவாசன் பேசியதாவது:

தமிழகத்தில் 11 ஊர்களில் உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாலைப் பணிக்கு அரசு ஒதுக்கியுள்ள ரூ.1000 கோடி நிதியில், 750 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் தரப்படுத்தப்பட உள்ளன.

இதில் பல்வேறு பணிகளான நடைபாதை, விளக்குகள், வர்ணம் தீட்டுதல், விளம்பர போர்டுகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட உள்ளன.

மாநகராட்சியில் முதலில் 63, 64, 65 மற்றும் 42-வது வார்டுகள், இப்பணிக்கு முன்மாதிரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, மற்ற வார்டுகளிலும் திட்டம் நிறைவேற்றப்படும்.

இப்பணிக்கு 5 ஆண்டு காலத்துக்கு சாலைகள் தோண்ட முடியாத அளவுக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை போன்ற பல்வேறு பணிகள் முடிந்த சாலைகள் தேர்வு செய்யப்படும். இக்குறிப்பிட்ட சாலைகள் 5 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் செய்து பராமரிக்கப்படும்.

இதில், வாகன நிறுத்தும் இடம், சர்வீஸ் சாலை, மருத்துவமனை, கோயில், பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இணைப்புச் சாலை மற்றும் நவீன சாலைகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தில் அதிக மரங்கள் வளர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் ஆர். விஜயகுமார், அனைத்து மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 16 April 2010 09:42