Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்

Print PDF

தினமணி 22.04.2010

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்

கடலூர், ஏப்.21: கடலூர் நகராட்சியில் ரூ. 25.35 கோடியில் புதிய சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடலூர் நகராட்சி இயல்புக் கூட்டம் புதன்கிழமை நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது.

பாதாளச் சாக்கடைத் திட்டத்தாலும் மழையினாலும் பழுதடைந்த சாலைகளை புதியதாக அமைக்க நகராட்சி திட்டம் தயாரித்து உள்ளது. அதன்படி 46.9 கி.மீ. தார்ச் சாலையும், 48.5 கி.மீ. சிமென்ட் சாலையும் (160 சாலைகள்) அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

÷இச்சாலைகள் ரூ. 25.35 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொகையை அரசு மானியத்துடன் கடனாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கோரலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்:

நகராட்சி கூட்ட மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைப்பது. இத்தீர்மானத்தை நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கொண்டு வந்தார்.

ஆற்றுத் திருவிழாவுக்காக பெண்ணை ஆற்றங்கரையை சுத்தம் செய்த பணிக்கு ரூ. 1.5 லட்சம் அனுமதிப்பது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதுயுகம் மற்றும் குட்லக் என்டர்டெய்ன்மெண்ட் சர்வீசஸ் நிறுவனத்துக்கு பொருள்காட்சி நடத்த தடையில்லாச் சான்று வழங்குவது.

÷கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தற்போது ரூ.424 லட்சத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.505 லட்சத்துக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகளை பார்வையிட மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 2 மேற்பார்வையாளர் பணியிடங்களை, ஒப்பந்தப்புள்ளி கோரி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிரப்ப அனுமதிக்கலாம்.

÷இதனால் ஆண்டுச் செலவு ரூ. 61 ஆயிரம். கடலூர் நகராட்சி பகுதியில் 34 குடிசைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள 14,911 குடும்பங்களின் வறுமை மற்றும் வாழ்வாதார நிலைகளை கண்டறிய கணக்கெடுக்கும் பணிக்கு, ரூ. 2.5 லட்சம் அனுமதிப்பது.

நகராட்சி சார்பில் கம்மியம்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ள நவீன எரிவாயு தகன மேடையை எவ்வாறு செயல்படுத்துவது, நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது என்பது பற்றி நகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் பழநி, ஈரோடு நகராட்சிகளுக்குச் சென்று பார்த்து வந்தச் செலவுத் தொகை ரூ. 60 ஆயிரம் அனுமதிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 22 April 2010 09:37