Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"பெரம்பலூர் நகராட்சியில் ரூ.1.58 கோடியில் புதிய தார்ச் சாலை'

Print PDF

தினமணி 22.04.2010

"பெரம்பலூர் நகராட்சியில் ரூ.1.58 கோடியில் புதிய தார்ச் சாலை'

பெரம்பலூர், ஏப். 21: பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 16 வார்டுகளில் ரூ.1.58 கோடியில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்படும் என்றார் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா.

பெரம்பலூர் நகராட்சி கூட்ட அரங்கில், நகராட்சியின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கி. முகுந்தன், ஆணையர் அ. அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 11-வது வார்டு விளாமுத்தூர் சாலை முதல் ராஜன் பெட்ரோல் பங்க் வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைப்பது. பெரம்பலூர் கனரா வங்கி முதல் காமராஜர் சிலை வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலையை மேம்படுத்துவது. வார்டு 1-ல் உள்ள கல்யாண் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச் சாலை அமைப்பது என்பன உள்ளிட்ட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், செய்தியாளர்களிடம் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா கூறியது:

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 1, 2, 3, 4, 5 மற்றும் 13-வது வார்டுகளைத் தவிர மீதமுள்ள 15 வார்டுகளிலும் ரூ.1.58 கோடியில் புதிய தார்ச் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதன்மூலம், பெரம்பலூர் நகராட்சிகுள்பட்ட பகுதிகளில் 80 சதம் சாலைப் பணிகள் நிறைவு பெறும். கொள்ளிடத்தில் இருந்து பெரம்பலூருக்கு கொண்டுவரப்படும் குடிநீர், பல்வேறு கிராமப் புறங்களுக்கு விநியோகிக்கப்படுவதால், பெரம்பலூர் நகர மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகிக்க முடியவில்லை. எனவே, குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, கொள்ளிடத்தில் இருந்து பெரம்பலூருக்கு தனி குடிநீர் குழாய் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகரில் வெறி நாய்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலம், நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படும் என்றார் அவர்.

கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளர் மணிமாறன், எழுத்தர் தங்கராசு, நகராட்சி உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், ஆர். சரவணன், கே. கனகராஜ், ஜி. பொற்கொடி, பி. கண்ணகி, பி. அன்புதுரை, ஜே.எஸ்.ஆர். கருணாநிதி, கே.ஜி. மாரிக்கண்ணன், எம். ரமேஷ்பாண்டியன், ஆர். ஈஸ்வரி, கே. புவனேஸ்வரி, என். ஜெயக்குமார், கே. பேபிகாமராஜ் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 22 April 2010 09:53