Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடந்தை நகராட்சியில் சாலைகள் அமைக்க கலந்துரையாடல்

Print PDF

தினமணி 24.04.2010

குடந்தை நகராட்சியில் சாலைகள் அமைக்க கலந்துரையாடல்

கும்பகோணம், ஏப். 23: கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் உலகத் தரத்திற்கு இணையான சாலைகள், பாலங்களை தமிழ்நாடு நகர்புறசத் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்க நகர்மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் சு.ப. தமிழழகன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண், அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ள இன்மாஸ் நிறுவனத் திட்ட மேலாளர் முருகன் கூறியது:

எதிர்வரும் 20 ஆண்டுகள் உழைக்கும் வகையிலும், சர்வதேசத் தரத்திற்கு இணையாகவும் அமைய உள்ள இத்திட்டத்திற்கு, இந்நகரின் சாலை விவரம் உள்ளிட்டவை குறித்த அறிக்கையை அடுத்த வாரம் அரசிடம் அளிக்கவுள்ளோம்.

இத் திட்டத்தின்படி, இங்குள்ள பழைய,புதிய பாலங்கள் புதுப்பிக்கப்படும். தேப்பெருமாநல்லூர் உள்ளிட்ட நான்கு வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு, இரு புறங்களிலும் சாலைகள், சாலையோரப் பூங்கா, நடை பாதை, சுரங்கப் பாதை, பேருந்து நிழல்குடை, காமராஜர் சாலை, கஸ்தூரிபாய் சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே பாலம்,போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இணைப்புச் சாலைகள், 22 மீட்டர் அகலமுள்ள சாலைகளில் டக்ட் வசதி, உள்ளிட்ட பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.

அப்போது, ஒவ்வொரு வார்டு பகுதியிலும் உள்ள தெருக்களில் என்னென்ன மேம்பாடு செய்யப்படவுள்ளது என்பதை விளக்கும் விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும், வாய்க்கால்களில் ஆக்ரமிப்புகள் இருப்பதை அகற்றுவது உள்ளிட்ட பல விவரங்களைத் தர வேண்டும் எனவும் உறுப்பினர்கள் தரப்பில் கோரினர். விவரங்களை அடுத்த வாரம் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார் திட்ட மேலாளர் முருகன்.

Last Updated on Saturday, 24 April 2010 09:18