Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

மந்தகதியில் வேளச்சேரி - தரமணி சாலை விரிவாக்க பணிகள்

Print PDF

தினமலர்             10.11.2010

மந்தகதியில் வேளச்சேரி - தரமணி சாலை விரிவாக்க பணிகள்

வேளச்சேரி : வேளச்சேரி-தரமணி இடையே 24.58 கோடி ரூபாய் ம திப்பிலான சாலை விரிவாக்கப் பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். வரும் தேர்தலுக்குள் போர்கால அடிப்படையில் பணிகள் முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து தரமணி, ராஜிவ்காந்தி சாலையை இணைக்கும் இணைப்பு சாலை விரிவாக்கம் செய்ய, பல ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பக்கட்டப் பணிகள் துவக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதல் பணிகள் துவங்கின. உலக வங்கி திட்டத்தின் கீழ் 24.58 கோடி ரூபாய் மதிப்பில் 3.6 கி.மீ., தூரத்திற்கு இச்சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

 சாலையின் அகலம் 30.5 மீட்டர் இதில், 15.25 மீட்டர் அகலம் கொண்ட இருவழிப்பாதை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பக்க தார் சாலையின் அகலம் 10.45 மீட்டர். சாலை ஓரத்தில் 2 மீட்டர் அகலத்திற்கு சைக்கிள் பாதை அமைகிறது. அதையடுத்து, மாநகராட்சி மழைநீர் கால்வாய் மேல் நடைபாதையும் அமைகிறது. சென்டர் மீடியன் 1.2 மீட்டர் அகலம் கொண்டது. அதில், மின்விளக்கு வசதி செய்யப்படுகிறது. தற்போது, வேளச்சேரியில் இருந்து இடது பக்கப் பாதை பணிகள் நடந்து வருகின்றன. அது முடிந்த பிறகு போக்குவரத்து மாற்றம் செய்து வலதுபக்க பணிகள் துவக்கப்படவுள்ளன. ஆனால், சாலை அமைக்கும் பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன. சாலை விரிவாக்கத்திற்காக கருங்கல் ஜல்லி கொட்டி பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை சாலை கூட முழுமையாக அமைக்கப்படவில்லை. சாலையின் பக்கவாட்டில் மழை நீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளமும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இதுகுறித்து பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு இறுதியில் சாலைவிரிவாக்கப்பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், சென்டர்மீடியன், கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் அனைத்தும் அரைகுறையாகவே நிற்கின்றன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, மழைக்காலம் துவங்கிவிட்டதால் பணிகள் நிறுத்த வாய்ப்புள்ளது. அடுத்து தேர்தல் வரவுள்ளதால், பணிகள் அனைத்தும் அடுத்த ஆறு மாதங்களுக்கு கிடப்பில் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்படைந்து விடுவர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் நேரடி பார்வையிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து, போர்கால அடிப்படையில் பணிகளை துவக்கி வரும் தேர்தலுக்குள் சாலை விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

ஆரணியில் ரூ. 3 கோடியில் சிமென்ட் சாலை

Print PDF

தினமணி               02.11.2010

ஆரணியில் ரூ. 3 கோடியில் சிமென்ட் சாலை

ஆரணி, நவ.1: ஆரணியில் ரூ. 3 கோடி மதிப்பிலான சிமெண்ட் சாலை மற்றும் தாற்காலிக பழ மார்க்கெட் ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் எ..வேலு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

ஆரணியில் காந்தி சாலை, சத்தியமூர்த்தி சாலை ஆகிய இரண்டு சாலைகளும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்பட்டன. இவற்றைத் திறந்து வைத்து அமைச்சர் பேசியது:

ஆரணியில் ரூ. 16 கோடியே 10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, நகரின் குடிநீருக்காக ஆர்க்காடு பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்தல், பழைய பஸ் நிலையத்தை புதுப்பித்தல், புதிய பஸ்நிலையத்தை சீரமைத்தல், நவீன எரிவாயு தகனமேடை, சாலையின் இருபக்கமும் மின்விளக்கு உள்ளிட்ட 12 பணிகள் நடைபெற்று வருகின்றன.

நகராட்சியின் பல்வேறு பணிகளுக்காக ரூ. 4 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரணிக்கு காவிரி நீர் விரைவில் வரவுள்ளது என்றார்.

விழாவுக்கு ஆரணி எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் தலைமை தாங்கினார். நகர்மன்றத் தலைவர் சாந்தி லோகநாதன், ஆணையர் சசிகலா, முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, மேற்குஆரணி ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், திமுக நகரச் செயலர் ஏ.செல்வரசு, ஒன்றியச் செயலர் எஸ்.எஸ்.அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 02 November 2010 11:13
 

சிறப்பு சாலை திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது

Print PDF

தினகரன்                  02.11.2010

சிறப்பு சாலை திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது

வேலூர், நவ.2: முதல்வர் அறிவித்த சிறப்பு சாலை திட்டத்துக்கான டெண்டர் விடும் பணி நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 36,759 கி.மீ. நீள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 19,581 கி.மீ. நீள சாலைகள் மழையாலும், குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்டதாலும் சேதம் அடைந்துள்ளன. இதில் 5 ஆயிரம் கி.மீ. நீள சாலை மிகவும் பழுதடைந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சாலைகள் திட்டம் என்ற திட்டத்தை கடந்த சுதந்திர தினத்தன்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்த நிதியைக் கொண்டு பழுதடைந்துள்ள சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. முக்கிய சாலைகள் கான்கிரீட் சாலைகளாகவும், அகலம் குறைந்த சாலைகள் அகலமாகவும் மாற்றப்படுகின்றன.

இந்த சிறப்புசாலை திட்டத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 9 மாநகராட்சிகளிலும், 149 நகராட்சிகளிலும், 560 பேரூராட்சிகளிலும் கடந்த மாதம் 23ம் தேதி முதல் சிறப்பு சாலை திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கு நேற்று கடைசி நாளாகும். தமிழகம் முழுவதும் நேற்று மாலை 3 மணிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்கள் முன்னிலையில் பெட்டிகள் திறக்கப்பட்டன. அதில் குறைந்த ஒப்பந்த புள்ளிகளை குறிப்பிட்டிருந்தவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளிலும் நேற்று சிறப்பு சாலை திட்டத்துக்கான டெண்டர் விடப்பட்டன.

இதையடுத்து சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் சாலை அமைக்கும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

 


Page 65 of 167