Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சென்னையில் 314 சாலைகள் 7 கோடியில் சீரமைப்பு

Print PDF

தினமணி 21.10.2010

சென்னையில் 314 சாலைகள் 7 கோடியில் சீரமைப்பு

சென்னை, அக். 20: சென்னையில் 314 சாலைகள் ரூ 7 கோடி செலவில் சரிசெய்யப்பட்டு வருகின்றன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலும், தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையிலும் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் சாலைகள் சரிசெய்யும் பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

சென்னையில் பழுதடைந்த சாலைகள் ஒட்டுப் பணி மூலமும், தேவைப்படும் இடங்களில் அகழ்ந்து எடுத்து சாலையை சீர் செய்யவும் சென்னை மாநகராட்சியால் ஆய்வு செய்யப்பட்டு, கண்டறியப்பட்டது.

சென்னையில் 314 பேருந்துச் சாலைகளில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 256 சதுர மீட்டர் பரப்பளவில் சாலைகள் |11 கோடி அளவுக்குச் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ரூ7 கோடியே 50 லட்சம் செலவில் 2 லட்சத்து 65 ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு 13 ஒப்பந்ததாரர்கள் மூலம் சாலைகளை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 10 நாள்களில் முடிக்கப்படும்.

சென்னை மாநகராட்சி மூலம் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகள் குறித்த விவரங்கள் முதல் முறையாக இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படுகிறது என்றார் மா.சுப்பிரமணியன். மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், துணை மேயர் சத்தியபாமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ரூ7.5 கோடி செலவில் 314 சாலைகள் சீரமைப்பு தொடக்கம் 10 நாளில் முடிக்க உத்தரவு

Print PDF

தினகரன் 21.10.2010

ரூ7.5 கோடி செலவில் 314 சாலைகள் சீரமைப்பு தொடக்கம் 10 நாளில் முடிக்க உத்தரவு

சென்னை, அக். 21: பழுதடைந்த நிலையில் உள்ள 314 சாலைகளை ரூ7.5 கோடி செலவில் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 10 நாளில் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு பணி பற்றிய விவரங்களை மாநகராட்சி இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று மேயர் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள சாலை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலை ஆகியவற்றை சீரமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் மேயர் கூறியதாவது: சென்னையில் பழுதடைந்த சாலைகளை கணக்கெடுத்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சிமெட்ரி சாலை, சூரியநாராயண சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, பிரகாசம் சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, அசோக் பில்லர் சாலை உட்பட 314 சாலைகளில் 4 லட்சத்து 12ஆயிரத்து 256 சதுர மீட்டர் பரப்பளவிற்கு சேதமடைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதை சீரமைக்க ரூ11 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாலைகள் அனைத்தும் பேருந்துகள் செல்லும் சாலைகள் ஆகும்.

முதல் கட்டமாக ரூ7.5 கோடி செலவில் 2 லட்சத்து 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு சாலைகளில் உள்ள பள்ளங்களை சமன் செய்தும், தேவையான இடங்களில் சாலையை அகழந்து எடுத்து தார்க்கலவை கொண்டு சீர்செய்யும் பணி இன்று(நேற்று) தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பணி போர்க்கால அடிப்படையில் 10 நாட்களில் முடிக்கப்படும். சாலைகள் சீரமைக்கும் பணியை கண்காணிக்க 10 மண்டலங்களிலும் 10 மேற்பார்வை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாநகராட்சி மூலம் எந்தந்த சாலைகள் சீரமைக்கப்படுகிறது என்ற விவரம் மாநகராட்சி இணைய தளத்தில் முதல் முறையாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் 2,349 சாலைகள் 590 கி.மீ. நீளத்திற்கு ரூ172 கோடி செலவில் சிமென்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இது தவிர கடந்த 4 வருடங்களில் 136.45 கி.மீ. நீளத்திற்கு பேருந்து சாலைகள் ரூ61 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

துணை மேயர் சத்தியபாமா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். தி.நகர், ஜி.என்.செட்டி சாலையை சீரமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

 

ரூ1 கோடியில் சாலைப்பணி தாந்தோணி நகராட்சியில் விரைவில் துவக்கம்

Print PDF

தினகரன் 20.10.2010

ரூ1 கோடியில் சாலைப்பணி தாந்தோணி நகராட்சியில் விரைவில் துவக்கம்

கரூர், அக்.20: தாந்தோணி நகராட்சியில் ரூ.1கோடியே 6லட்சம் செலவில் பழுதான சாலைகள் புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கப்படவுள்ளது.

தாந்தோணி நகராட்சி பகுதியில் 2010&2011ம் ஆண்டிற்கான சிறப்பு சாலைகள் திட்டத்தில் இயற்கை சீற்றத்தால் பழுதான சாலைகளை செப்பனிடும் பணிக்கு பழுதான தார் சாலைகளை தேர்வு செய்து சாலைப் பணிகளை மேற்கொள்ள நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் அறிவித்திருந்தார். அதன்படி தாந்தோணி நகராட்சி நிர்வாகம் பணிகளை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ரூ.1 கோடியே 6லட்சம் நிதி அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

தாந்தோணிமலை பெருமாள் கோயிலை சுற்றியுள்ள தேர்வீதியில் தார்தளம் அபிவிருத்தி செய்தல், தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி சாலை சந்திப்பு முதல் கரூர்&ஈசநத்தம் மெயின்சாலை இணைப்பு வரை தார்சாலை, குமரன்சாலை இரண்டாவது தெரு மற்றும் மூன்றாவது தெரு சிமென்ட் தளம் மற்றும் வடிகால் அபிவிருத்தி செய்தல், ராயனூர் பழைய ஓஎச்டி தென்புறம் உள்ள கிழமேல் மெயின்சாலை, வெள்ளகவுண்டன்நகர் மெயின்சாலை சந்திப்பு, மூன்று குறுக்குதெருக்களுக்கு சிமென்ட தளம் மற்றும் வடிகால் அமைத்தல்.

காமராஜ்நகர் முதல்தெரு மெயின்சாலை, தென்வடல் சாலையில் தார்தளம் அமைத்தல், பாரதிதாசன் நகர் தென்வடல் சாலை மற்றும் கிழமேல் குறுக்கு சாலை சிமென்ட் தளம், வடிகால், கல்வெர்ட் அமைத்தல், ஜீவாநகர் புதிய ரேஷன்கடை கிழமேல் மற்றும் தென்வடல் சாலை தார்தளம் அமைத்தல், திண்ணப்பாநகர் விஸ்தரிப்பு தென்வடல் சாலையில் தார் தளம் அமைத்தல், கரூர்&திண்டுக்கல் சாலை சந்திப்பு முதல் (டிஎன்எச்பி அருகில்) பெருமாள் கோயில் தெற்கு தேர்வீதி சந்திப்பு வரை சிமென்ட் தளம் அமைத்தல், காந்திகிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் இரட்டை சாலை, மேற்கு பகுதி தார்சாலைகள் அபிவிருத்தி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான தீர்மான முன்மொழிவு நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 


Page 69 of 167