Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ 2.57 கோடியில் சாலைப் பணிகள்

Print PDF

தினமணி 12.10.2010

ரூ 2.57 கோடியில் சாலைப் பணிகள்

குளித்தலை, அக். 11: குளித்தலையில் ரூ 2.57 கோடியில் சாலைப் பணிகள் மேற்கொள்வது என்று திங்கள்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளித்தலை நகர்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் அ. அமுதவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வே. பல்லவிராஜா, மேலாளர் எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நகராட்சிப் பகுதியில் ரூ 2.57 கோடியில் சிமென்ட், தார் சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

பி. ஆனந்த்குமார் (திமுக): சாலைகளை தேர்வு செய்தது யார்? குறிப்பிட்ட சாலைகளைத்தான் மாற்ற வேண்டும் என்று ஏதாவது விதி உள்ளதா?

தலைவர்: குளித்தலை நகராட்சியில் மொத்தம் 21 சாலைகள் அமைக்க குறிப்பாணை அனுப்பப்பட்டது. முதல் கட்டமாக 14 சாலைகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பி. ஆனந்த்குமார்: அண்ணாநகர் புறவழிச் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடம் தொடர்பாக பிரச்னை உள்ள போதிலும், அந்தப் பகுதியில் சாலை அமைக்க ரூ 23.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரச்னைக்குரிய இடத்தை நகராட்சி விலைக்கு வாங்க வேண்டும்.

தலைவர்: இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் நகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

துணைத் தலைவர் பல்லவிராஜா (மதிமுக): பிரதான பகுதியில் மட்டுமே தற்போது சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குடிசைப் பகுதியில் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தலைவர்: அடுத்த கட்டமாக அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் அமைக்கப்படும்.

பி. ராமலிங்கம், பி. ஆனந்த்குமார்: குளித்தலையில் கரூர்- திருச்சி நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, புறவழிச் சாலையையொட்டிய பகுதியில் புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் இரா. மாணிக்கமும் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்: தற்போது பேருந்து நிலையம் உள்ள இடம் கோயில் நிலமாகும். பேருந்து நிலையத்திலிருந்து வரும் வருமானத்தைவிட வாடகை அதிகமாக உள்ளது. இந்த நிலையில், புறநகர்ப் பேருந்து நிலையம் அமைந்தால் அதற்கு ஒதுக்குவதற்கு போதிய நிதி வசதியில்லை. இருப்பினும், இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.

டி. கலைமதி (சுயேச்சை): குளித்தலை நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக உள்ளது.

தலைவர்: இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ஒட்டன்சத்திரம் பை-பாஸ் சாலை ரூ 60 லட்சத்தில் சீரமைப்பு

Print PDF

தினமணி 11.10.2010

ஒட்டன்சத்திரம் பை-பாஸ் சாலை ரூ 60 லட்சத்தில் சீரமைப்பு

ஒட்டன்சத்திரம், அக். 10: ஒட்டன்சத்திரம்-நாகணம்பட்டி பை-பாஸ் சாலை ரூ 60 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியை, அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-நாகணம்பட்டி பை-பாஸ் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது.

இது குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன் தினமணி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையறிந்த, அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவரிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.பின்னர், இச்சாலையை உடனடியாக சீரமைக்க ரூ 60 லட்சம் நகராட்சி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, சாலை சீரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை அவர் தொடங்கிவைத்தார். இதேபோல், நகராட்சிக்குள்பட்ட 10-வது வார்டில் ரூ 16 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார் அர. சக்கரபாணி. இந்நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், திமுக பொதுக்குழு உறுப்பினர் மோகன், நகராட்சிக் கவுன்சிலர் பி.கே. முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

கடலூர் நகராட்சி பகுதியில் ரூ10 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணி ஐயப்பன் எம்எல்ஏ தகவல்

Print PDF

தினகரன் 11.10.2010

கடலூர் நகராட்சி பகுதியில் ரூ10 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு பணி ஐயப்பன் எம்எல்ஏ தகவல்

கடலூர், அக். 11: கடலூர் நகராட்சி பகுதியில் ரூ.10 கோடியில் சாலை சீரமைப்பு மற்றும் புதிய சாலைகள் போடும் பணி விரைவில் துவங்கவுள்ளது என ஐயப்பன் எம்எல்ஏ கூறினார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பில் மரம் நடுவிழா லட்சு சோரடியா நினைவு மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தொழிலதிபர் பாலு, பள்ளி தாளாளர் மாவீர்மல் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தனர்.

குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகணபதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐயப்பன் எம்எல்ஏ எஸ்.எஸ்.ஆர் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பேசியதாவது; உலகளவில் மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாகவும், வரவேற்கத்தக்க வகையிலும் செயல்படுத்தி வருவதில் முதன்மையாக திகழ்கிறார் முதல்வர் கருணாநிதி. தற்பொழுது குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறி ஏழை மக்களின் வாழ்வில் வளம் சேர்த்து வருகிறது. எனவே பல்வேறு கட்சிகள் இருந்தாலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைப்பதில் சிறந்த அரசாக திமுக தலைமையிலான அரசு அமைந்துள்ளது. நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து ரூ.10 கோடியில் சாலைகள் சீரமைக்கவும், புதிய சாலை பணிகள் மேற்கொள்ளவும் விரைவில் பணிகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

விழாவில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் ரங்கநாதன், பொதுச் செயலாளர் மருதவாணன், நகர மன்ற உறுப்பினர் சார்பில் சலீம், துணைப்பொதுச் செயலாளர் வெங்கடேசன், உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். திருப்பாதிரிப்புலியூர் காவல்துறை சார்பில் ஆட்டோ நிறுத்துமிடம் திறந்து வைக்கப்பட்டு வாகனங்களின் முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. குடியிருப்போர் நலச்சங்க பொருளாளர் சம்பத்குமார், துணைத் தலைவர் விருத்தாம்பாள் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். இணைச் செயலாளர் ராசு நன்றி கூறினார்.

 


Page 74 of 167