Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

நகர சாலைகளை புதுப்பிக்க ரூ.4.04 கோடி : குன்னூர் நகராட்சித் தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 21.09.2010

நகர சாலைகளை புதுப்பிக்க ரூ.4.04 கோடி : குன்னூர் நகராட்சித் தலைவர் தகவல்

குன்னூர் : "குன்னூரில் உள்ள சாலைகளை புதுப்பிக்க, மாநில அரசு 4.04 கோடி ஒதுக்கியுள்ளது; சாலையின் ஆயுட்காலத்தை நீடிக்க "இன்டர்லாக் பிளாக்' கற்கள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என, குன்னூர் நகராட்சித் தலைவர் ராமசாமி கூறினார்.

மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள தரமற்ற சாலைகளைப் புதுப்பிக்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என, சமீபத்தில், மாநில முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதனடிப்படையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிடம் திட்ட மதிப்பீடு கோரப்பட்டது; குன்னூர் நகராட்சி சார்பில் பல சாலைப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 7 கோடி ரூபாய் அளவுக்கு திட்ட அறிக்கை வழங்கப்பட்டது; 4 கோடியே 4 லட்சம் ரூபாயை, மாநில அரசு நகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை, மாநில துணை முதல்வர் ஸ்டாலின், குன்னூர் நகராட்சித் தலைவர் ராமசாமியிடம் வழங்கினார்.

நகரில் மேற்கொள்ளப்பட உள்ள சாலைப் பணி குறித்து, நகராட்சித் தலைவர் ராமசாமி கூறியதாவது: சாலைப் பணிக்காக, மாநில அரசிடம் 7 கோடி ரூபாய் கேட்டிருந்தோம்; முதற்கட்டமாக 4.04 கோடி ரூபாயை மாநில அரசு வழங்கியுள்ளது. குன்னூர் சிங்காரா சாலை, .டி.., அமைந்துள்ள வாக்கர் ஹில் சாலை, மவுண்ட்பிளசன்ட் நீர்தேக்கத் தொட்டி மற்றும் பிரதான சாலை, குயில்ஹில் சாலை, பிருந்தாவன் பள்ளி சாலை உட்பட 5 கி.மீ., தூர சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன; பணிகள் விரைவில் துவக்கப்படும்.

சாலைகளில் கழிவுநீர், மழைநீர் வெளியேற வசதியில்லாததால் சாலையின் ஆயுட்காலம் குறைந்து விடுகிறது; இத்தகைய இடங்களில் "இன்டர்லாக் பிளாக்' கற்கள் பதிக்கப்படும்; தவிர, சிமென்ட் கான்கிரீட் சாலையும் அமைக்கப்படும். சாலையின் தரமும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு சாலைகள் தாக்குப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குன்னூர் நகர மக்களுக்கு தேவையான சாலை, நடைபாதை, தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்து அத்தியாவசியப் பணிகளையும் செய்து முடிக்க வேண்டும் என துணை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்; பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க பரிந்துரை செய்யவும் தயாராக உள்ளார்.

 

மதுரையில் ரோடுகள் சீரமைப்பு 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 21.09.2010

மதுரையில் ரோடுகள் சீரமைப்பு 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க அரசு 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. பாதாளசாக்கடை, மழைநீர் வடிகால், வைகை குடிநீர் திட்டம் போன்ற பணிகளுக்காக நகர் பகுதியில் குழிகள் தோண்டப்பட்டன. இதனால் பல ரோடுகள் சேதமடைந்தன. 140 கி.மீ., தூரத்திற்கு ரோடுகளை மேம்படுத்தும் பணிக்காக 43 கோடி ரூபாய் தேவை என, மாநகராட்சி சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த அரசு 114 கி.மீ., தூரத்திற்கு ரோடுகளை மேம்படுத்த 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ரோடுகள் மேம்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் நடந்தது.

தலைமை பொறியாளர் சக்திவேல் மற்றும் அனைத்து துறை பொறியாளர்கள் பங்கேற்றனர். பாதாளசாக்கடை, குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து தார் ரோடு அமைக்கவும், இதற்காக அக்., முதல் வாரத்தில் டெண்டர் விடுவதற்கும் முடிவு செய்யப்பட்டன.

 

பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் ரோடு மதிப்பீடு தயாரிக்கும் பணி

Print PDF

தினமலர் 15.09.2010

பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் ரோடு மதிப்பீடு தயாரிக்கும் பணி

பொள்ளாச்சி :பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் ரோடு போடுவதற்கு மதிப்பீடு தயாரிக்கும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்புக்கு பிறகு, இரண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழைய பஸ் ஸ்டாண்டினுள் தார் ரோடு பெருமளவு சேதமடைந்துள்ளதால், புதிதாக கான்கிரீட் ரோடு போடுவதற்கு நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால், பழைய பஸ் ஸ்டாண்டின் உள்பகுதி நகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் முழுமையாக சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நகாரட்சி பொறியாளர் மோகன் கூறுகையில், ""பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள இலவச கழிப்பிடம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் 15 லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் உட்காரும் இருக்கைகள், தரை, மேற் கூரைகள் புதுப்பித்து, பெயிண்டிங் அடிக்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாயில் பஸ் ஸ்டாண்டினுள் கான்கிரீட் ஓடுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த சதுர மீட்டர் எவ்வளவு என்று கணக்கிட்டு மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசு அனுமதி பெறப்பட்டதும் கான்கிரீட் தளம் அமைக்கப்படும்'' என்றார்.

 


Page 89 of 167