Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ30 கோடியில் 140 கி.மீ. நீள சாலைகளை செப்பனிட திட்டம்

Print PDF

தினமணி 20.08.2010

ரூ30 கோடியில் 140 கி.மீ. நீள சாலைகளை செப்பனிட திட்டம்

திருநெல்வேலி, ஆக. 19: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சிறப்புச் சாலைகள் அமைக்கும் திட்டத்தின்கீழ் ரூ| 30 கோடியில் சுமார் 140 கி.மீ. நீளமுள்ள சாலைகள் செப்பனிடப்பட உள்ளதாக மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் அ.லெ.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் என். சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மேயர் பேசியதாவது:

தமிழக அரசின் சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் இம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட உடனே திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பும்படி அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது. அதற்காக சில நிபந்தனைகளையும் கூறியிருந்தனர்.

இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் சாலையானது கடந்த 5 ஆண்டுகளுக்குள் செப்பனிட்டிருக்கப்படக் கூடாது. பஸ்கள் செல்லும சாலைகள், புராதன நகரச் சாலைகள், வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சாலைகள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள், கல்வி நிலையங்களுக்கு செல்லும் சாலைகள், தொழிற்கூடம் மறறும் சந்தைப் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

அதன்படி, மாநகர் பகுதி முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்து சாலைகளை தேர்வு செய்து பட்டியலை தயார் செய்துள்ளனர். இதை அரசுக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு வரப்பெற்ற உடன் இந்த சாலைகள் |ரூ 30 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

நயினார்குளம் சந்தை சாலையானது நெடுஞ்சாலைத் துறையினரால் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் காய்கறி மொத்த விற்பனைச் சந்தையும், மிளகாய் வத்தல் மண்டியும், பெரிய வாகனங்களை பராமரிக்கும் பணிமனைகளும் உள்ளன. இந்த சாலை வழியாக மதுரை சாலையில் இருந்து தென்காசி மற்றும் கேரளத்திற்கு செல்லும் வாகனங்களும் செல்கின்றன.

எனவே, இந்த சாலையை இருபுறமும் அகலப்படுத்தி சுங்கச்சாவடிகளை அமைத்து அந்த சாலை வழியாகச் செல்லும் கனரக வாகனத்திற்கு ரூ| 150-ம், இலகுரக வாகனத்திற்குரூ100-ம் வசூல் செய்யவும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் பூங்காவில் |ரூ 22 கோடியில் பல்நோóக்கு கலையரங்கம் மற்றும் வணிக வளாகமானது பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை கட்டி-இயக்கி-ஒப்படைக்கும் திட்டத்தில் மேற்கொள்ள ஆர்வம் உள்ள நிறுவனங்களின் விருப்பத்தை கேட்டகவும் முடிவு செய்து அதற்கான தீர்மானமும் இந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

உறுப்பினர் டி.எஸ். முருகன் (அதிமுக): சிறப்புச் சாலைகள் திட்டத்தில் நெல்லையப்பர் திருக்கோயிலின் நான்கு ரத வீதிகளும் செப்பனிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த சாலைகள் இப்போது நான்றாகத்தான் இருக்கின்றன. அதே சாலைகளை மீண்டும் செப்பனிட்டு மக்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம். எனது பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த சாலைப் பணியும் மேற்கொள்ளவில்லை. அவற்றை சீரமைக்க வேண்டும் என்றார். இதே கருத்தை திருநெல்வேலி மண்டலத் தலைவர் விஸ்வநாதனும் வலியுறுததினார்.

மேயர்: சாலைகளை செப்பனிடும் திட்டத்திற்கான மதிப்பீடு அறிக்கையை சென்னையில் இருந்து அவசரமாக கேட்டதால் அதிகாரிகள் இரவு-பகலாக பணி செய்து சாலைகளை தேர்வு செய்து பட்டியலை தயார் செய்துள்ளனர். மேலும், செப்பனிட வேண்டிய சாலைகள் இருந்தால் அவற்றையும் அடுத்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

பிóன்னர் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் சிறப்புச் சாலைகள், நயினார்குளம் சாலை சுங்கச்சாவடி, பல்நோககு கலையரங்கம் ஆகிய திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

22 கி.மீ. நீள சாலைகளை சீரமைக்க முடிவு

Print PDF

தினமணி 20.08.2010

22 கி.மீ. நீள சாலைகளை சீரமைக்க முடிவு

உதகை, ஆக. 19: உதகை நகர்மன்றத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் ரூ.499 லட்சம் மதிப்பில் 22 கி.மீ. நீள சாலைகளை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உதகை நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது:

தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரின் உத்தரவின் பேரில் மாநிலத்திலுள்ள அனைத்து நகராட்சிகளுக்கும் சிறப்பு சாலைகள் சீரமைக்கும் திட்டம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பேரில் உதகை நகராட்சியில் நிபந்தனைகளுக்குட்பட்டு 7 சாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தாமஸ் சர்ச் சாலை, பாட்னா ஹவுஸ் சாலை ஆகியவை ரூ.48.7 லட்சத்திலும், அணிக்கொரை சாலை, லோயர் உட் ஹவுஸ் சாலை மற்றும் ஹிக்கின்ஸ் சாலை மேம்படுத்தும் பணிகள் ரூ.69.5 லட்சத்திலும், பழைய அக்ரஹாரம் சாலை, ஆட்லி சாலை, கீழ் கோடப்பமந்து சாலை, மெயின்பஜார் சாலை மற்றும் அப்பர் பஜார் சாலையை மேம்படுத்தும் பணிகள் ரூ.69.3 லட்சத்திலும், ரிட்சிங் காலனி பைபாஸ் சாலை, கிராண்டப் சாலை மற்றும் டைகர் ஹில் சாலை மேம்படுத்தும் பணிகள் ரூ.96.3 லட்சத்திலும், ரெட்கிராஸ் சாலை, தீட்டுக்கல் சாலை மற்றும் ஆரம்பி ஹவுஸ் சாலை மேம்படுத்தும் பணிகள் ரூ.75 லட்சத்திலும், ஆர்.கே.புரம் மற்றும்

கிளன்ராக் சாலை மேம்படுத்தும் பணிகள் ரூ.96 லட்சத்திலும், விஜயநகரம் காலனி சாலை மற்றும் எல்க்ஹில் சாலை மேம்படுத்தும் பணிகள் ரூ.44.2 லட்சத்திலும் மேற்கொள்ளப்படும்.

இப்புதிய திட்டத்தின்கீழ் உதகை நகராட்சியில் 21.6 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.499 லட்சம் நிதி ஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு உதகை நகர்மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நகர்மன்ர தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ராமநாதபுரத்தில் அனைத்து சாலைகளும் ரூ.12.30 கோடியில் சீரமைக்கப்படும்

Print PDF

தினமணி 20.08.2010

ராமநாதபுரத்தில் அனைத்து சாலைகளும் ரூ.12.30 கோடியில் சீரமைக்கப்படும்

ராமநாதபுரம், ஆக. 19: ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் ரூ.12.30 கோடி மதிப்பில் விரைவில் சீரமைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் ஆர்.லலிதகலா ரெத்தினம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் ஆர்.லலிதகலா ரெத்தினம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் முஜ்புர் ரகுமான் முன்னிலை வகித்தார். நகர்மன்றத் தலைவர் பேசியது:

ராமநாதபுரம் நகரில் உள்ள 97 சாலைகள் இரண்டே மாதங்களில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.12.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றுக்கு இணைப்புக் கட்டணம் செலுத்தாதவர்கள் சாலைகள் சீரமைக்கும் முன்பாகவே அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். 33 வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கூட்டத்தில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையரின் சேவையைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவில் விருது வழங்கி கௌரவித்திருப்பது நகராட்சிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என நகர்மன்றத் துணைத் தலைவர் ராஜாஉசேன், அதிமுக உறுப்பினர்கள் டி.ஆர்.சீனிவாசன், வீரபாண்டி ஆகியோரும் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.

நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பலராமன், முனியசாமி, நாகஜோதி, கண்மனி, வீரபாண்டி உள்பட பலரும் நகரின் வளர்ச்சி குறித்த கருத்துகளைத் தெரிவித்தனர்.

 


Page 103 of 167