Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ.5.70 கோடி ஒதுக்கீடு; இனி, ரோடு பளபளக்கும்!

Print PDF

தினமலர் 20.08.2010

ரூ.5.70 கோடி ஒதுக்கீடு; இனி, ரோடு பளபளக்கும்!

திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மோசமான நிலையில் உள்ள ரோடுகளை புதுப்பிப்பதற்காக, அரசின் சிறப்பு திட்டம் மூலமாக, ரூ.5.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது; நகராட்சி தலைவி விஜயலட்சுமி தலைமை வகித்தார். ரூ.5.70 கோடியில் ரோடுகள் புதுப்பிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட விவாதம்:

விஜயகுமார் (.தி.மு..,): சந்திராபுரம் குட்டை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர்வெல் அதிகப்படுத்த வேண்டும்.

பத்ரன் (தி.மு..,): தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, வி.ஜி.வி., கார்டனில் உள்ள போர்வெல்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

சேதுபதி (காங்.,): அங்கீகராம் இல்லாத இடங்களில் வீடு கட்டியவர்களுக்கு, மின் வசதி உள்ளிட்டவை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நகராட்சி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். திருநகரில் ரோடு மோசமாக உள்ளது; அதற்கு உரிய நடவடிக்கை தேவை. மேட்டுப்பாளையம் தண்ணீர் முறையாக கிடைக்க வேண்டும்; வினியோகத்தில் கவுன்சிலர்களின் தலையீடு இருக்கக்கூடாது.

தெய்வாத்தாள் (.கம்யூ.,): ஒன்பதாவது வார்டுக்கு எவ்வித பணியும் தீர்மானத்தில் வரவில்லை. தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது.

சுப்ரமணியம் (மா.கம்யூ.,): பொது நிதி பணிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது. கால நிர்ணயம் செய்து, திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்.

பழனிசாமி (.தி.மு..,): சென்னிமலைபாளையம் மயான ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு செல்லும் ரோட்டை புதுப்பிக்க வேண்டும். குடிநீர் தொட்டி அருகில் உள்ள காலியிடத்தை பாதுகாக்க வேண்டும். புதுப்பாளையத்தில் இருந்து வஞ்சிவரம்புதூர் வரையுள்ள ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.

தலைவி விஜயலட்சுமி, செயல் அலுவலர்(பொறுப்பு) ராமசாமி ஆகியோர் பதிலளித்ததாவது: சிறப்பு திட்டத்தில் போடப்படும் ரோடுகளை குழுவினர் ஆய்வு செய்வர்; அதன் பின், பணிகள் மேற்கொள்ளப்படும். பொது நிதி திட்டங்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. சந்திராபுரம், நல்லூர், வி.ஜி.வி., கார்டன் பகுதிகளில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தெருநாய் பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். சிறப்பு திட்டத்தின் கீழ், மோசமான ரோடுகளை மட்டுமே புதுப்பிக்க முடியும்; ஒன்பதாவது வார்டில் அதற்கான வாய்ப்பு இல்லை. கூடுதல் குடிநீருக்கு அரசின் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. கொசு மருந்து அடிக்க புதிய "ஸ்பிரேயர்' வாங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கொசு பிரச்னை இருக்காது. அங்கீகரிக்கப்படாத மனை பிரச்னை தொடர்பாக வரும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

திட்டச்சாலைக்கு வெட்டு; மைதானத்துக்கு முழுக்கு: அரசு அறிவிப்பால் அதிர்ச்சி!

Print PDF

தினமலர் 19.08.2010

திட்டச்சாலைக்கு வெட்டு; மைதானத்துக்கு முழுக்கு: அரசு அறிவிப்பால் அதிர்ச்சி!

கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இருப்பினும், மக்களின் நலனுக்கு எதிராக, திட்டச்சாலை இடத்தை விற்க ஆதரவாக அரசு அறிவிப்பு வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நகர "மாஸ்டர் பிளான்' விரிவு அபிவிருத்தித் திட்டம் 13ல், உக்கடத்திலிருந்து நஞ்சுண்டாபுரம் ரோட்டை இணைக்கும் வகையில் 100 அடி திட்டச்சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டது. இச்சாலைக்கு அருகிலேயே ஸ்ரீபதி நகர் பகுதியில் 60 சென்ட் பரப்பில் மைதானத்துக்கும் (ரிசர்வ் சைட்) இடம் ஒதுக்கப்பட்டது.

கடந்த 1992ல் அரசால் அங்கீகரிக் கப்பட்ட இந்த மாஸ்டர் பிளானில் உள்ளபடி, திட்டச்சாலை அமைக்கவோ, மைதானம் அமைக்கவோ மாநகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த இடங்களை விற்று பல கோடி ரூபாய் பணம் பார்ப்பதற்கான முயற்சிக்கு பகிரங்க ஆதரவளித்துள்ளது. ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் அதிகரித்துள்ளன; பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் அனைவருமே, 80 அடி ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோட்டை மட்டுமே பயன்படுத்துவதால் ராமநாதபுரம் சிக்னல் மற்றும் திருச்சி சாலைகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திட்டச்சாலை அமைந்தால் போக்குவரத்து நெரிசல் பாதியாகக் குறைந்து விடும். திட்டச்சாலைக்கான இடத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் யாராவது கோர்ட்டுக்குப் போனால், வீடுகள் இடிக்கப்டும் வாய்ப்பு அதிகம்.

முதற்கட்டமாக, ராமநாதபுரம் 80 அடி ரோட்டிலிருந்து நஞ்சுண்டாபுரம் ரோட்டை இணைக்கும் வகையிலாவது, இந்த 100 அடி திட்டச்சாலையை அமைக்க வேண்டும். அவிநாசி சாலையின் நெரிசலைக் குறைக்க, மூன்று திட்டச்சாலைகளை அமைத்த மாவட்ட நிர்வாகம், நகரின் கிழக்குப் பகுதியில் ஒரு திட்டச்சாலை அமைக்க முயற்சி எடுக்கவில்லை. உத்தேச திட்டச்சாலை இடங்களை விற்கும் முயற்சியையும் கூட மாவட்ட நிர்வாகம் தடுக்கவில்லை.

இப்பகுதியிலுள்ள மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுக்கவில்லை. இந்த இடங்களை விற்க களம் இறங்கியுள்ளனர். மூன்றாண்டுக்கு முன்பாக,இடங்களை விற்கும் முயற்சியை கையில் எடுத்தார் மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் (தி.மு..,) உதயகுமார்.

முதலில் மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட 60 சென்ட் இடத்தையும், பின் 100 அடி திட்டச்சாலையை 60 அடியாகக்குறைத்து மீதியிடத்தையும் விற்பதே அவரது நோக்கம். அவரது ஆதரவால், இந்த இடங்களை நில உபயோக மாற்றம் செய்ய 2008 ஜன.21ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மா.கம்யூ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தபோதும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகர ஊரமைப்புத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை நிராகரிக்க பொது மக்கள் கோரினர்.

விளைவாக, 2009 அக்.8ம் தேதியன்று சென்னை நகர ஊரமைப்புத்துறை கமிஷனர், இந்த பரிந்துரையை நிராகரித்து, திருப்பி அனுப்பினார். அதில், "பொது ஒதுக்கீட்டு இடங்களை வேறு உபயோகங்களுக்கு மாற்றக்கூடாது' என்ற கோர்ட் தீர்ப்பின் அடிப்படையிலும், திட்டச்சாலையை அகலம் குறைப்பது ஏற்புடையதல்ல' என்றும் குறிப்பிட்டு ஒரு தொகுப்பை நீக்கி திருப்பி அனுப்புவதாகக் கூறியிருந்தார்.

"மாநகராட்சி கவுன்சிலின் தவறான பரிந்துரைக்குக் கிடைத்த அடி' என, எல்லோரும் சந்தோஷப்பட்டனர். "முயற்சியில் சற்றும் மனம் தளராத' ஆளும்கட்சியினரோ, முக்கிய நபர்களை வைத்து காய் நகர்த்தினர். இதற்கு கோவை மாநகராட்சியின் முக்கிய அதிகாரியும் உதவியுள்ளார். அவரது ஆதரவால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாஸ்டர் பிளானில் உள்ள விரிவு அபிவிருத்தித் திட்டம் 13ல் பல்வேறு திருத்தங்களைச் செய்து, வரைவு நிலைத் திட்ட அறிவிப்பு அறிக்கை (டிராப்ட் வேரியேஷன் நோட்டிபிகேஷன்) வெளியிட்டனர்.

அதில், 100 அடி திட்டச்சாலையை 60 அடியாகவும், 40 அடி சாலையை 23 அடியாகக் குறைக்கவும், 60 சென்ட் மைதானத்தை பொது ஒதுக்கீட்டு இடத்திலிருந்து நீக்கவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவிக்க 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த அறிக்கை, கோர்ட் உத்தரவுக்கு எதிரானதுடன், மக்கள் நலனையும் புறக்கணிப்பதாக உள்ளது. இதை நடைமுறைப்படுத்த, பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் மற்றும் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதுபற்றி அப்பகுதி மக்களுக்கு அதிகம் தெரியாததால், பொதுமக்கள் தரப்பிலிருந்து ஆட்சேபம் எழவில்லை. இருப்பினும்,அனுப்பப்பட்ட ஆட்சேபங்களை அரசு பரிசீலிக்குமா, ஆளும்கட்சியினரின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து, வரைவு நிலைத் திட்டத்தை அங்கீகரிக்குமா என்பது தெரியவில்லை.

திட்டச்சாலை இடங்களை விற்க முயற்சி செய்வது பற்றி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் உதயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கோவை நகர மாஸ்டர் பிளானில் உள்ள 134 உத்தேச திட்டச்சாலைகளில் 104 திட்டச்சாலைகளுக்கான இடங்களில் வெறும் கட்டடங்கள்தான் உள்ளன. மீதமுள்ள 30 திட்டச்சாலைகளையாவது அமைக்க வேண்டுமென்பதே கோரிக்கை. அதை ஏற்றே "ஒரு மண்டலத்துக்கு ஓராண்டுக்கு ஒரு திட்டச்சாலை' அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 100 அடி திட்டச்சாலையைப் பொறுத்தவரை, 80 அடி ரோட்டிலிருந்து உக்கடத்துக்கு இடையில் ஏராளமான கட்டடங்கள் முளைத்து விட்டன. அதை எடுக்கவே முடியாது. 80 அடி ரோட்டிலிருந்து நஞ்சுண்டாபுரம் ரோடு வரை திட்டச்சாலை அமைக்குமிடத்தை வாங்க மாநகராட்சிக்கு வசதியில்லை. கமிஷனரே இந்த இடத்தை ஆய்வு செய்து விட்டு, "இலவசமாக இடம் தர முடியுமா' என்று உரிமையாளர்களிடம் கேட்டார்.

உரிமையாளர்களும், "100 அடியில் 60 அடி சாலை அமைக்க இடம் தருகிறோம்; மீதியிடத்தை எடுத்துக் கொள்கிறோம்' என்றனர். அதற்கான முயற்சிதான் இப்போது நடக்கிறது. அரசு ஒப்புக் கொண்டால், மறுநாளே 60 அடி ரோடுக்கான இடம் எடுக்கப்பட்டு, 60 அடி திட்டச்சாலையும், அதற்கு முன்பாக அதே வழித்தடத்தில் பாதாள சாக்கடையும் அமைக்கப்படும். எனது பதவி முடிவதற்குள் இதைச் செய்வேன். மற்றபடி, இடத்தை விற்பதில் எந்த ஆர்வமும் இல்லை. இவ்வாறு உதயகுமார் கூறினார்.

பிற திட்டச்சாலைக்கு பெறப்பட்ட நிதியை போன்றே உள்ளூர் திட்டக்குழுமத்திலிருந்தே இந்த சாலைக்கும் நிதி பெறலாம்; அல்லது அரசின் சிறப்பு நிதியும் பெறலாம். அதற்கான முயற்சிகளை மக்கள் பிரதிநிதிகள் எடுக்கவில்லை. மைதான இடத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தாலும், திட்டச்சாலை அகலத்தைக் குறைக்காமல் 100 அடி அகலத்தில் அமைக்க இடத்தை விலைகொடுத்து வாங்க முயற்சி செய்யலாம்.

அது அன்று; இது இன்று : ராமநாதபுரம் 80 அடி திட்டச் சாலை அளவுக்குக் கோவை நகரில் பெரிய திட்டச்சாலை வேறெங்கும் இல்லை. இதை அமைக்கவிடாமல் போராடியவர் இப்போதைய மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் உதயகுமார். அவரே, முக்கியப் பொறுப் பில் உள்ள இந்த காலகட்டத்தில் அவர் முயன்றிருந்தால் இந்த 100 அடி திட்டச்சாலை வந்திருக்கும். அங்குள்ள இடத்தை விற்கவும், அதற்காக திட்டச்சாலை அகலத்தைக் குறைக்கவும் இவரே முயன்று வருவது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

-நமது நிருபர்-

Last Updated on Thursday, 19 August 2010 08:38
 

சாலைகளை சீரமைக்க ரூ.4.99 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 19.08.2010

சாலைகளை சீரமைக்க ரூ.4.99 கோடி ஒதுக்கீடு

ஊட்டி : ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.4 கோடியே 99 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகரமன்ற அவசரக் கூட்டம், நேற்று நடத்தப்பட்டது. சிறப்பு சாலைகள் சீரமைக்கும் திட்டம், 2010-"11ம் ஆண்டில், அனைத்து நகராட்சிகளிலும் நிறைவேற்ற, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி, செயின்ட் தாமஸ் சர்ச் சாலை, பாட்னா ஹவுஸ் சாலையில் 1.76 கி.மீ.,க்கு 48.70 லட்சம், அணிக்கொரை சாலை, லோயர்வுட் ஹவுஸ் சாலை மற்றும் ஹிக்கின்ஸ் சாலையில் 3.59 கி.மீ.,க்கு 69.50 லட்சம், பழைய அக்ரஹாரம் சாலை, ஆட்லி சாலை, கீழ்கோடப்பமந்து சாலை, மெயின்பஜார் சாலை, அப்பர் பஜார் சாலையில் 3.20 கி.மீ., தூரத்துக்கு 69.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ரிட்சிங் காலனி பைபாஸ் சாலை, கிராண்டப் சாலை மற்றும் டைகர்ஹில் சாலையில் 5.19 கி.மீ.,க்கு 96.30 லட்சம், ரெட்கிராஸ் சாலை, தீட்டுக்கல் சாலை, ஆரம்பி ஹவுஸ் சாலை 2.43 கி.மீ.,க்கு 75 லட்சம், ஆர்.கே.புரம் சாலை, கிளன்ராக் சாலையில் 3.07 கி.மீ.,க்கு 96 லட்சம், விஜயநகரம் காலனி சாலை மற்றும் எல்க்ஹில் சாலையில் 2.36 கி.மீ.,க்கு 44.20 லட்சம், நகராட்சிக்கு உட்பட்ட 21.60 கி.மீ., தூர சாலையை சீரமைக்க, 4 கோடியே 99 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. தொகையை ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

Last Updated on Thursday, 19 August 2010 08:38
 


Page 105 of 167