Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலைப் பணிகளை 20-க்குள் முடிக்க வேண்டும்

Print PDF

தினமணி 10.06.2010

சாலைப் பணிகளை 20-க்குள் முடிக்க வேண்டும்

கோவை, ஜூன் 9: செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தையும் ஜூன் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டார்.

செம்மொழி மாநாட்டையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் கோவையில் ரூ.300 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிசாமி, கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, தனி அலுவலர் க.அலாவுதீன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

திருச்சி சாலை அகலப்படுத்தும் பணி, கொடிசியா அரங்கிற்குச் செல்லும் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரையிலான சாலைகளின் ம்பாடு குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதனுடன் ஆலோசித்தார். மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்தும் இடங்கள், போக்குவரத்து ஏற்பாடு, தங்குமிட வசதி, சுகாதார வசதி குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கோவை நகரில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டார். குடியரசுத் தலைவர் மற்றும் மிக முக்கிய விருந்தினர்கள் தங்க உள்ள சுற்றுலா மாளிகை ரூ.1.93 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப் பணிகளைப் பார்வையிட்ட ஸ்டாலின், விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அவிநாசி சாலையில் அண்ணா சிலை சந்திப்பு, பாலசுந்தரம் சாலை, பாரதியார் சாலை சந்திப்பு, சின்னசாமி சாலை, எஸ்.என்.ஆர். கல்லூரி திட்டச் சாலை, கணபதி - விளாங்குறிச்சி சாலை, விளாங்குறிச்சி - சத்தி சாலைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி சார்பில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் 218 இடங்களில் பஸ் நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுகின்றன. கணபதி சிஎம்எஸ் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில் அமர்ந்து பார்வையிட்ட ஸ்டாலின், வெயில்-மழை பயணிகள் மீது விழாத வகையில் மேற்கூரையை நீட்டிக்க அறிவுறுத்தினார். தற்போது பஸ் நிறுத்தத்தில் செம்மொழி மாநாட்டின் லோகோ வைக்கப்பட்டுள்ள பலகையில், மாநாடு முடிந்த பிறகு அரசின் திட்டங்களை விளக்கும் விளக்கப் படங்களை வைக்க அறிவுறுத்தினார்.

சாயிபாபா காலனியில் கே.ஜி. லேஅவுட் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பார்வையிட்ட துணை முதல்வர், அங்கு வந்த பெண்களிடம் பூங்காவை சிறப்பாகப் பராமரிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அங்கிருந்து வடகோவை, அவிநாசி சாலை மேம்பாலம் வழியாக பேரூர் வரை சென்று சாலை வசதியை பார்வையிட்டார். செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் சாலைப் பணிகள் அனைத்தையும் ஜூன் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிசாமி, கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், மேயர் ஆர்.வெங்கடாசலம், தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, தனி அலுவலர் க.அலாவுதீன், நெடுஞ்சாலைத் துறைச் செயலர் கோ.சந்தானம், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு ஆகியோர் ஆய்வின்போது உடன் சென்றனர்.

 

நகராட்சிகளில் 500 கி.மீ கான்கிரீட் ரோடு அரசு உத்தரவு

Print PDF

தினகரன் 09.06.2010

நகராட்சிகளில் 500 கி.மீ கான்கிரீட் ரோடு அரசு உத்தரவு

கோவை, ஜூன் 9:நகராட்சிகளில் 500 கி.மீ தூரத்திற்கு மெட்டல் ரோடுகளை கான்கிரீட் ரோடாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட அரசாணையில், " தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2009& 10ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 500 கி.மீ தூரம் கான்கிரீட் ரோடு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நகராட்சிகளில் உள்ள 500 கி.மீ தூரம் உள்ள மெட்டல் ரோடு, 59.52 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் ரோடாக மாற்றப்படும். முதல்கட்டமாக 60 கி.மீ தூரம் கான்கிரீட் அமைக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி பணிகள் படிப் பாக துவக்கப்படும். இந்த திட்ட பணிகளுக்கு மாநில திட்ட குழு மற்றும் நிதிக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2006&07ம் ஆண்டில் 2 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு மெட்டல் ரோடு, கான்கிரீட் ரோடாக மாற்றப்பட்டது, " என தெரிவித்துள்ளார்.

நகராட்சி முதன்மை செயலர் வெளிட்ட மற்றொரு உத்தரவில், " ஜப்பான் வங்கி நிதியுதவி மூலம் தமிழக நகர்ப்பகுதி உள்கட்டமைப்பு திட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சி கட்டுமானங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 10.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, " என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி அறிவிப்பு நரைனா தொழிற்சாலை பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பு

Print PDF

தினகரன் 09.06.2010

மாநகராட்சி அறிவிப்பு நரைனா தொழிற்சாலை பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பு

புதுடெல்லி, ஜூன் 9: நரைனா தொழிற்சாலை பகுதியில் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படாத கான்கிரீட் சாலை அமைக்கப்படும்என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுபற்றி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால், சாலைகள் பாதிக்கப்பட்டு, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்படி 104 சாலைகள் உள்ளன. எனவே மழை,வெயில் எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத அளவுக்கு கான்கிரீட் சாலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக நரைனா தொழிற்சாலை பகுதியில் இப்படிப்பட்ட கான்கிரீட் சாலை அமைக்கப்படும். இதற்கான ஏல ஒப்பந்தங்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

கான்கிரீட் சாலை அமை க்க ஏலம் எடுக்கும் ஒப்பந்ததாரர் நெடுஞ்சாலை விதிகளுக்கு உட்பட்டு சாலையை அமைக்க வேண்டும். மழை நீரை சேமிக்க தேவையான வசதிகளை செய்யவேண்டும். அத்துடன் சாலையின் இரு ஓரங்களிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபாதை அமைக்க வேண்டும். சாலையின் மத்தியில் தடுப்புச் சுவரும் கட்டித்தர வேண்டும். சாலையின் எந்த இடத்திலும் மழை நீர் தேங்கக் கூடாது.இப்படி மாநகராட்சியின் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து கான்கிரீட் சாலை யை ஒரு ஆண்டுக்குள் அமைக்க வேண்டும்.இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.

 


Page 120 of 167