Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கரூர் நகராட்சி சாலைகளை மேம்படுத்த புதிய திட்டங்களுக்கு அனுமதி

Print PDF

தினமணி    30.05.2010

கரூர் நகராட்சி சாலைகளை மேம்படுத்த புதிய திட்டங்களுக்கு அனுமதி

கரூர், மே 28: கரூர் நகராட்சி சாலைகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கரூர் நகராட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலைப் பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான ஆய்வுப் பணியில் சேலத்தைச் சேர்ந்த முகேஷ் அசோசியேட் என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டது. கரூர் நகராட்சியின் தற்போதைய நிலை, எதிர்கால வளர்ச்சி மக்கள்தொகை பெருக்கம், போக்குவரத்து நெருக்கடி போன்றவற்றை கணக்கிட்டு எந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை இந்நிறுவனம் வகுத்துள்ளது.

இத்திட்டத்துக்கான கலந்தாலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பி. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கரூர் நகராட்சி 5.96 சதுர கி.மீ சுற்றளவுக் கொண்டது. 76,336 மக்கள் வசித்து வருகின்றனர். ஒரு சதுர கி. மீட்டருக்கு சராசரியாக 12, 808 பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி சாலை 75.05 கி.மீ தொலைவும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் 10.25 கி.மீ தொலைவும் உள்ளன.

இதில் நகராட்சி வசமுள்ள சாலையில் 54 கி.மீ தொலைவு தார்ச் சாலையாகவும், 15.22 கி.மீ தொலைவு கான்கிரீட் சாலையாகவும், 10 கி.மீ தொலைவு கப்பி சாலையாகவும் உள்ளன என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, புதிய திட்டத்தின்படி சாலைகள் அமைப்பது, பூங்கா, தெருக்களின் தரத்தை மேம்படுத்துவது, மரக்கன்றுகள் நடுவது, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் மேம்பாலம் கட்டுவது, சுரங்கப்பாதை அமைப்பது, புதிய பேருந்து நிலையம் அமைப்பதன் அவசியம், மினி பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்களை வேறு பகுதிக்கு மாற்றுவது, சந்தைகளை மாற்றி அமைப்பது, கூடுதல் சந்தைகள் அமைக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை செய்து முடிக்கத் தேவையான நிதியில் 50 சதம் அரசும், மீதமுள்ள நிதி 10 வருடத்தில் திரும்ப செலுத்த வேண்டிய கடனாகவும் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போதுள்ள அவசரத் தேவையாக கரூர் நகராட்சியிலுள்ள 36 வார்டுகளின் சாலைகளைத் தரம் உயர்த்த வேண்டும். அதன் பின்னர், அடுத்தக் கட்டப்பணிகளை மேற்கொள்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பூங்கா அமைப்பது என்றும் இப்பணிகளுக்கான திட்ட மதிப்பினை தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், நகராட்சி துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் எஸ். உமாபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் என். மணிராஜ், . முத்துசாமி, இரா. பிரபு, ராஜலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

வளம்' சார்பில் ரூ.50 லட்சத்தில் ரோடு விரிவாக்கம்

Print PDF

தினமலர்  28.05.2010

வளம்' சார்பில் ரூ.50 லட்சத்தில் ரோடு விரிவாக்கம்

திருப்பூர் : "வளம்' அமைப்பு சார்பில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தை முதல் ஏ.பி.டி., ரோடு வரை ரோடு விரிவாக்க பணிகள் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், "வளம்' அமைப்பு சார்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. குறுகிய ரோடுகளை விரிவாக்கம் செய்தல், புதிய பாலம் அமைத்தல், பாலத்தை அகலப்படுத்துதல் என, பல பணிகளை நிறைவேற்றி வருகிறது.

பல்லடம் ரோட்டில் வரும் வாகனங்கள், நகருக்குள் செல்லாமல், நடராஜா தியேட்டர் ரோடு மற்றும் மங்கலம் ரோடுகளை சென்றடையும் வகையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நடக்கின்றன. உழவர் சந்தை அருகே இருந்த பாலம் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், உழவர் சந்தை பாலம் முதல் ஏ.பி.டி., ரோடு வரை, 30 அடி அகலத்துக்கு ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மயானத்தின் சுவர் புதிதாக அமைக்கப்பட்டது. இதனால், கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையாமல், புறநகர் பகுதிகளுக்கு சென்று வர வழித்தடம் அமைந்துள்ளது.

குறிப்பாக, .பி.டி., ரோடு பள்ளத்தில் தடுப்புச்சுவர் அமைத்து, ரோட்டை அகலப்படுத்துவ தோடு, சுவரால் மறைக்கப்பட்ட கருவம்பாளையம் செல்லும் வழித்தடத்துக்கு சிறு பாலம் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன.இப்பணி நிறைவடையும் போது, பழைய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலகம், ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் ரோடு பகுதிகளில் நெரிசல் கணிசமாக குறையும்.

பன்றிகளால் அவதி: வளம் அமைப்பினர் செய்து வரும் அத்தியாவசிய பணிகள் அனைத்தும், பன்றிக்கூட்டத்தால் பாழடைந்து விடுகிறது. .பி.டி., ரோடு ஜம்மனை பள்ளம், இரு மாதங்களுக்கு முன் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்டது. அங்கு பன்றிகள் கூட்டம் கூட்டமாக திரிவதால், கழிவுநீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்களை அமைக்க வலியுறுத்தும் மாநகராட்சி நிர்வாகம், மாநகர பகுதியில் பன்றி வளர்க்க தடை விதிக்க வேண்டும்.

 

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

Print PDF

தினகரன்     25.05.2010

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

பண்ருட்டி, மே 25: பண்ருட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் பச்சையப்பன் பார்வையிட்டார். பண்ருட்டி நகராட்சி சார்பில் 24வது வார்டு பகுதியில் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று நகர் மன்ற தலைவர் பச்சையப்பன் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். கலவை சரியாக இருக்க வேண்டும். பணி தரமாக நடைபெற வேண்டும் என கூறினார். அதனை தொடர்ந்து காந்தி மெயின்ரோட்டில் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்வது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

பின்னர் 15வது வார்டு பகுதியில் குறுகிய அளவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை அகலமாக்கி புதிதாக வாய்க் கால் கட்டும் இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆணையாளர் உமா மகேஸ்வரி, பொறியாளர் சுமதி செல்வி, மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

 


Page 123 of 167